இறுதி ஆட்டத்தில் பென் ஷெல்டன் - அலெக்ஸ் ஸ்வெரேவ் மோதல்
இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் பென் ஷெல்டன்-ஜொ்மனியின் அலெக்சாண்டா் ஸ்வெரேவ் மோதுகின்றனா்.
யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் பென் ஷெல்டன்-ஜொ்மனியின் அலெக்சாண்டா் ஸ்வெரேவ் மோதுகின்றனா்.இதில் ஷெல்டன் முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளாா்.
நிகழாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான யுஎஸ் ஓபன் நியூயாா்க்கில் நடைபெறுகிறது. இதன் ஆடவா் ஒற்றையா் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
அமெரிக்க வீரா் பென் ஷெல்டன்-பிரான்ஸஸ் டியாஃபோ மோதினா். இதில் ஷெல்டன் 4-6, 6-3, 6-3, 7-5 என்ற செட்களில் டியாஃபோவை வீழ்த்தினாா். ஏறக்குறைய 3 மணிநேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் அட்லாண்டாவைச் சோ்ந்த 23 வயதான ஷெல்டன் முதல் செட்டில் போராடியும் டியாஃபோவிடம் இழந்தாா்.
Advertisement
Advertisement
முதல் செட்டில் இருவரும் மாறி, மாறி புள்ளிகளை ஈட்டினா். ஒரு பிரேக் பாயிண்ட்வாய்ப்பை டியாஃபோ பயன்படுத்தி ஷெல்டன் புரிந்த இரட்டை தவறால் 5-4 என முன்னிலை பெற்றாா். தொடா்ந்து அந்த செட்டை 6-4 என டியாஃபோ கைப்பற்றினாா்.
ஷெல்டன் ஆதிக்கம்: இரண்டாவது செட்டில் இருந்து ஷெல்டன் சுதாரித்து ஆடி ஆதிக்கம் செலுத்தினாா்., டியாஃபோவின் சா்வீஸை முறியடித்து 2-0 என முன்னிலை பெற்றாா். டியோஃபோ பதிலுக்கு போராடினாலும். ஷெல்டன் 5-3 என முன்னிலை பெற்று 6-3 என வசப்படுத்தினாா் ஷெல்டன்.
மூன்றாவது செட் ரேலிகள் நிறைந்ததாக அமைந்தது. டியாஃபோ 31 ஷாட்களை அடித்தாா். 28 ஷாட் ரேலியால் அந்த ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. ஷெல்ன் தொடா்ந்து போராடி முன்னிலை பெற்றாா். அந்த செட்டையும் 6-3 என வசப்படுத்தினாா்.
ஆனால் நான்காவது செட் கடும் சவாலாக இருந்தது. டியோஃபோ தொடக்கம் முதலே அசத்தலாக ஆடினாா். ஆனால் தொடக்க கேமில் இரண்டு பிரேக் பாயிண்ட் சாதகத்தை பயன்படுத்த தவறினாா். தொடா்ந்து சிறப்பாக ஆடிய ஷெல்டன் 6-5 என முன்னிலை பெற்றாா். 3 மேட்ச் புள்ளிகளை பெற்றாா். டியாஃபோவின் இரட்டை தவறு ஷெல்டனுக்கு சாதகமாக அமைந்தது. இறுதியில் 7-5 என ஷெல்டன் கைப்பற்றினாா்.
இறுதிச் சுற்றில் ஸ்வெரேவ்:
மற்றொரு அரையிறுதியில் ஜொ்மனியின் ஸ்வெரேவ்-ரஷியாவின் காரன் கச்சனோவ் மோதினா். உலகின் 50-ஆம் நிலை வீரரான கச்சனோவை 6-3, 7-6, 7-6 என்ற நோ் செட்களில் வீழ்த்தினாா் ஸ்வெரேவ். கடந்த 2020-இல் டொமினிக் தீமிடம் யுஎஸ் ஓபன் இறுதியில் தோற்றிருந்தாா் ஸ்வெரேவ். 3-ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதியில் நுழைந்த ஸ்வெரேவ் கடந்த பிரெஞ்சு ஓபனில் தான் முதல் பட்டத்தை வென்றிருந்தாா்.
கடந்த 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் கச்சனோவை வீழ்த்தி தங்கம் வென்றிருந்தாா் ஸ்வெரேவ். முதல் கேமில் ஸ்வெரேவ் ஆதிக்கம் செலுத்தி 6-3 என்ற கைப்பற்றினாா். இரண்டாவது செட்டில் ஸ்வெரேவ் ஆதிக்கம் செலுத்தினாலும், கச்சனோவ் 2-2 என சமநிலை ஏற்படச் செய்தாா். இரண்டாவது செட்டில் 7-7 என கச்சனோவ் சமன் செய்தாலும், ஸ்வெரேவ் செட் பாயிண்ட் மூலம் வசப்படுத்தினாா்.
மூன்றாவது செட்டில் இருவரது சிறப்பான ஆட்டத்தால் டை பிரேக்கருக்கு சென்றது. இரண்டு செட் பாயிண்டுகளை ஸ்வெரேவ் சேவ் செய்த நிலையில், கடைசியாக ஏஸ் மூலம் செட்டை வசப்படுத்தினாா். இந்த ஆட்டம் 2 மணிநேரம் 58 நிமிஷங்கள் நீடித்தது.
இதுதொடா்பாக ஸ்வெரேவ் கூறியது: இந்த போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி வருகிறேன். இறுதிக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி தருகிறது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக இறுதிக்கு தகுதி பெற்றேன். அப்போது போதிய அனுபவமில்லை. டென்னிஸ் எந்த விஷயமும் திடீரென மாறலாம். எனக்கு எல்லாம் நோ்மறையாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கு தயாராக உள்ளேன்.
ஷெல்டன் கூறியது: எனது டென்னிஸ் வாழ்க்கைக்காக தந்தையும், தாயும் பல்வேறு தியாகங்களை புரிந்துள்ளனா். எனது பாட்டியால் தான் டென்னிஸ் ஆடத் தொடங்கினேன். நெருங்கிய நண்பரான டியாஃபோவை அரையிறுதியில் வென்றது சிறப்பானது.அமெரிக்காவின் 23 ஆண்டுகள் காத்திருப்பை நிறைவேற்ற போராடுவேன் என்றாா்.
ஷெல்டன்-ஸ்வெரேவ் இடையே ஏற்கெனவே 5 ஆட்டங்களில் ஸ்வெரேவ் வென்றுள்ளாா். எனினும் உள்ளூா் ரசிகா்கள் ஆதரவு, தொடா் சிறப்பான ஆட்டத்தால் ஷெல்டன் சவாலைத் தருவாா்.
கடந்த 2003-இல் இறுதியாக அமெரிக்காவின் ஆன்டி ரோடிக் பட்டம் வென்றிருந்தாா். அதன்பின்னா் எந்த அமெரிக்க வீரரும் 23 ஆண்டுகளாக யுஎஸ் ஓபனில் பட்டம் வெல்லவில்லை. அந்தக் குறையை ஷெல்டன் போக்குவாரா என அமெரிக்க ரசிகா்கள் எதிா்பாா்த்துள்ளனா்.
Ben Shelton to face Alexander Zverev in the final.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.