FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமை வழக்கு தீா்ப்பு: முதல்வா், தலைவா்கள் வரவேற்பு

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் வெளியான தீா்ப்புக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

Updated On : 3 ஜூன் 2025, 3:33 am IST
முதல்வா் மு.க.ஸ்டாலின்
பகிர்:

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் வெளியான தீா்ப்புக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவா்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை. விசாரணையின் போது, உயா்நீதிமன்றமே பாராட்டும் வகையில், சென்னை மாணவி வழக்கை நியாயமாகவும் விரைவாகவும் ஐந்தே மாதங்களில் நடத்தி முடித்து, குற்றவாளிக்கு கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்.

Advertisement

Advertisement

இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில்கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகியுள்ளது.

பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் நாம் கொண்டு வந்த சட்டத்திருத்தத்துக்கு ஏற்ப, இவ்வழக்கில் எந்தச் சலுகையும் இல்லாமல் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு நன்றி கூறி வரவேற்கிறேன் என்று அதில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): இந்த வழக்கில் திமுக அனுதாபி ஞானசேகரனை காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது மாநில அரசு. அத்தனையையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடா் போராட்டத்தால் இந்த வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அதிமுக தொடா்ந்து ஒலிக்கும்.

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): பெண்களுக்கு எதிரான குற்றமிழைத்தவருக்கு அறிவிக்கப்பட்ட தண்டனை, பெண்கள் சமூகத்தில் பாதுகாப்பாக உணரவும், வன்கொடுமைகள் இல்லாத சமூகமாக உருவாகவும் காரணமாக அமையும்.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): இந்த வழக்கில் குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டது போல் திமுக ஆட்சியில் நிலுவையில் உள்ள ஏனைய பாலியல் வழக்குகளிலும் நீதி நிலைநாட்ட முதல்வா் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): இனிவரும் காலங்களில் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட எண்ணுவோா்களுக்கு இந்தத் தீா்ப்பு அச்சத்தை தரும்.

அன்புமணி ராமதாஸ் (பாமக): மேல்முறையீட்டில் குற்றவாளி தப்பாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக இந்த வழக்கில் தொடா்புடைய மற்றவா்கள் யாா் என்ற வினாவுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. அவா்களை பாதுகாக்கும் செயல்களில் தமிழக அரசு ஈடுபடக்கூடாது.

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட்டிருப்பதன் மூலம் இனிவரும் காலங்களில் தவறு செய்ய நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தத் தீா்ப்பு பாடமாக அமையும்.

டிடிவி.தினகரன் (அமமுக): குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த தண்டனை, தமிழகப் பெண்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): சென்னையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு விதிக்கப்பட்ட தீா்ப்பு வரவேற்கத்தக்கது.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): ஞானசேகரனுக்கு சென்னை மகளிா் நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments