பசும்பொன் செல்லும் வழியில் ஓபிஎஸ் - செங்கோட்டையன் - டிடிவி தினகரன் சந்திப்பு!
பசும்பொன் செல்லும் வழியில் ஓபிஎஸ் - செங்கோட்டையன் - டிடிவி தினகரன் சந்திப்பு..
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய மூவரும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இன்று(அக். 30) அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகிய இருவரும் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு ஒரே காரில் பயணித்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. முன் இருக்கையில் ஓபிஎஸ்ஸும் பின் இருக்கையில் செங்கோட்டையனும் அமர்ந்திருந்தனர்.
Advertisement
Advertisement
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் இவர்களுடன் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் பசும்பொன் செல்லும் வழியில் அபிராமம் பகுதியில் உள்ள சாலையில் மூவரும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
தற்போது மூவரும் ஒன்றாக இணைந்து பசும்பொன் சென்று முத்துராமலிங்கத் தேவருக்கு ஒன்றாக அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
தொடர்ந்து சசிகலாவும் பசும்பொன் வரவுள்ளதாகவும் இவர்கள் மூவரும் சசிகலாவைச் சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் ஆகிய மூவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்திப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, அதிமுக ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஓபிஎஸ்ஸும் செங்கோட்டையனின் இந்த கருத்தை வரவேற்றிருந்தார். இதுதொடர்பாக செங்கோட்டையனை சந்திப்பேன் என்று ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில், இன்று இந்த சந்திப்பு நடந்துள்ளது. முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி காரணமாக செங்கோட்டையன் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இபிஎஸ் மீது டிடிவி தினகரனும் அதிருப்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ள தலைவர்கள் சந்தித்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
OPS, Sengottaiyan, TTV Dinakaran meeting in ramanathapuram
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.