முகப்பு
தமிழ்நாடு

வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?

வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு என்பது பற்றி..

Updated On : 25 ஏப்ரல் 2026, 12:57 pm IST
வாக்குச்சாவடி - DPS
பகிர்:

ஒவ்வொரு தேர்தலின்போதும், முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெறுகிறது.

ஆனால், வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துக்கொண்டு வாக்கு எண்ணும் மையங்களில் சேர்ப்பித்துவிட்டால் அவர்களது கடமை நிறைவடைந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாகக் கொண்டு செல்வதில் காவல்துறையினர் முழு கவனமும் இருக்கும்.

ஆனால், வாக்குச்சாவடியாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு பள்ளி அதன்பிறகு எப்படி இருக்கும் என்பதை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

Advertisement

Advertisement

பள்ளிச் சுவர் முழுக்க வாக்குச்சாவடி எண்கள், பாகம் எண், வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருக்கும் வேட்பாளர்களின் பட்டியல் என அனைத்தும் ஒட்டப்பட்டு பாதி கிழித்தும் பாதி கிழிக்காமலும் விடப்படும்.

இவற்றை சுத்தம் செய்து மீண்டும் பள்ளி புதுப்பொலிவுடன் செயல்படுவதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து தர வேண்டும் என்றாலும், அதனை உறுதி செய்வது முழுக்க முழுக்க பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பாக மாறி விடுகிறது.

ஒவ்வொரு மண்டலத்திலும் இந்த முறை 250 முதல் 350 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அதில் பெரும்பாலானவை பள்ளிகள்தான். வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முந்தைய நாளிலேயே பள்ளி வளாகம் முழுக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவிட்டன. மறுநாள் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களும் உணவுப் பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்கள், தேநீர் கப்புகளை ஆங்காங்கே வீசி எறிந்திருந்தனர்.

குப்பைகளைக் கூட அப்புறப்படுத்திவிடலாம், பள்ளிச் சுவர்களில் ஒட்டப்படும் போஸ்டர்களை அப்புறப்படுத்துவதுதான் சவாலாக மாறுகிறது. உயரத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை அப்புறப்படுத்தாமலேயே விட்டுவிடுகிறார்கள்.

ஒரு சில இடங்களில் போஸ்டர்களை பிரிக்கும்போது பெயிண்டோடு சேர்ந்து வந்துவிடுகிறது. இதனால் சுவர்கள் மோசமாக சேதமடைகின்றன. அதனை சரி செய்யும் பொறுப்பும் பள்ளி நிர்வாகத்தை சேர்கிறது.

பள்ளியை வாக்குச்சாவடிக்காகப் பயன்படுத்தும் அதிகாரிகள் யாருமே, அந்தப் பள்ளியை மீண்டும் பழைய நிலையில் விட்டுச் செல்ல வேண்டும் என்ற பொறுப்பை எடுத்துக் கொள்வதில்லை. கழிப்பறைகளையும், வாக்குச்சாவடிக்காகப் பயன்படுத்திய வகுப்பறைகளையும் பார்க்க மோசமாக இருக்கின்றன.

வாக்குச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்களே, இரண்டு நாள்களாக தேர்தல் பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை பத்திரமாக சேர்த்துவிட்டு, வீடு திரும்புவதற்கே நேரமாகிவிடும்.

எனவே, தேர்தல் ஆணையமே இதற்கான தீர்வை காண வேண்டும். பள்ளிகளை தேர்வு செய்து வாக்குச்சாவடிக்காக நியமிக்கும் அதிகாரிகளே, அதனை சுத்தம் செய்து பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் பணிகளையும் உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

summary

About who is responsible for cleaning schools that are used as polling stations..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.