FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மாமல்லன் நீர்த்தேக்கம் திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

இயற்கைக்கு எதிரான மாமல்லன் நீர்த்தேக்கம் திட்டத்தை கைவிட்டு என அன்புமணி அரசுக்கு வலியுறுத்தி இருப்பது கூறித்து...

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 4:04 pm IST
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி - கோப்புப்படம்
பகிர்:

இயற்கைக்கு எதிரான மாமல்லன் நீர்த்தேக்கம் திட்டத்தை கைவிட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் வாழும் 5000 மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை தமிழக அரசு கைவிடாது என்று வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மீனவ மக்களுக்கு எதிரான இத்திட்டத்தை கைவிடுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த தவெக இப்போது பின்வாங்குவது கண்டிக்கத்தக்கது.

சென்னையை அடுத்த கானத்தூர் ரெட்டிக்குப்பத்துக்கும், கொக்கிலிமேட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள உப்பங்கழிகளை அழித்து 5,161 ஏக்கர் நிலப்பரப்பில் மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு முந்தைய திமுக ஆட்சியில் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. மாமல்லன் நீர்த்தேக்கம் கட்டப்பட்டால் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி, அப்போதே பாமக எதிர்ப்பு தெரிவித்தது. சோழிங்கநல்லூர், திருப்போரூர் உள்ளிட்ட சட்டப் பேரவை தொகுதி தேர்தல் பரப்புரைகளின் போது த.வெ.க.வும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்று இன்றைய முதல்வரும், அப்போதைய தவெக தலைவருமான விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். அதனால், மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டம் கைவிடப்படும் என்று கோவளம் பகுதியில் வாழும் மீனவ மக்கள் உறுதியாக நம்பினர்.

Advertisement

Advertisement

ஆனால், த.வெ.க. ஆட்சிக்கு வந்து 3 மாதங்களாகிவிட்ட நிலையில், மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தைக் கைவிடுவது குறித்து ஆட்சியாளர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. மாறாக, மாமல்லன் நீர்த்தேக்கத்தை கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ள மீனவ மக்கள் தங்களின் எதிர்காலம் என்னவாகுமோ? என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படும் பகுதி இயற்கையின் அதிசயம் ஆகும். இங்கு தான் கடல் நீரும், நன்னீரும் கலக்கின்றன. அதனால், இந்த பகுதியில் தான் அரிய வகை நண்டு, இரால், மீன்கள் போன்றவை இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன, அதுமட்டுமின்றி, சதுப்பு நிலங்களை உள்ளடக்கிய இந்த நீர்நிலையின் தனித்துவமான தன்மைக்காகத் தான் இங்கு லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வலசை வருகின்றன. கடல் நீரும், நன்னீரும் சங்கமிக்கும் இடமாக உள்ள இப்பகுதியை நீர்த்தேக்கம் என்ற பெயரில் அடைத்து விட்டால் இதன் தனித்துவம் அழிந்து விடும். அதனால், இப்பகுதியில் உள்ள மீன்வளம் அழிந்து விடும்.

மாமல்லன் நீர்த்தேக்கம் அமைந்துள்ள கானத்தூர் ரெட்டிக்குப்பம் முதல் கொக்கிலிமேடு குப்பம் வரையிலான பகுதிகளில் பல மீனவர் குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் உள்ள 5 ஆயிரம் மீனவர் குடும்பங்களுக்கு இந்த பகுதியில் மீன் பிடிப்பது தான் வாழ்வாதாரமாகும். மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படுவதால் அங்குள்ள மீன் வளம் முற்றிலுமாக அழிந்து விடும். அதனால், 5000 மீனவர் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள்.

அதுமட்டுமின்றி, இந்த பகுதியின் பல்லுயிர் வாழிடச் சூழலையும் மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டம் சிதைத்து விடும். வெளிநாட்டு பறவைகள் இந்தப் பகுதிகளுக்கு வலசை வருவது அடியோடு நின்று விடும். இவை அனைத்துக்கும் மேலாக, கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதிகள் கடல் சீற்றத்திற்கு ஆளாகவும் வழிவகுக்கும்.

கானத்தூர் ரெட்டிக்குப்பம் முதல் கொக்கிலிமேடு வரையிலான பகுதியில் அமைந்துள்ள உப்பங்கழிகளும், கழிவெளிப் பகுதிகளும் கடல்நீரின் சீற்றத்தைத் தடுத்து நிலப்பகுதிகளை காக்கும் இயற்கை அரணாகத் திகழ்கின்றன. இவற்றை அழித்து மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டால், இனிவரும் காலங்களில் கானத்தூர் ரெட்டிக்குப்பம், கோவளம், நெம்மேலி, பட்டிப்புலம், தேவனேரி, மாமல்லபுரம், கொக்கிலிமேடு உள்ளிட்ட கடலோர கிராமங்களுக்குள்ளும், திருப்போரூர், தெற்கு பட்டு, கேளம்பாக்கம் உள்ளிட்ட உட்புற பகுதிகளுக்குள்ளும் கடல் நீர் உள்புகும் ஆபத்து உருவாகி விடும். புயல் மற்றும் சூறாவளி காலங்களில் இந்த பகுதிகளுக்கு கற்பனை செய்து பார்க்க முடியாத பாதிப்புகளை இந்தத் திட்டம் ஏற்படுத்தி விடும்.

சென்னை பெருநகர எல்லையும், மக்கள்தொகையும் ஆண்டுக்கு ஆண்டு விரிவடைந்து கொண்டே செல்லும் நிலையில், அதிகரித்து வரும் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதற்காகவும், சென்னையில் பெய்யும் மழை மூலம் கிடைக்கும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் புதிய நீர்த்தேக்கங்கள் கட்டப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இன்னும் கேட்டால் இந்தக் கருத்தை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இயற்கை நமக்கு அளித்த கழிவெளிகளை அழித்து இத்தகைய நீர்த்தேக்கங்களை அமைப்பது இயற்கை மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும். இத்தகைய செயல்களை அனுமதிக்கவே முடியாது.

கோவளம் பகுதியில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைப்பதால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகள் அதிகம் என்பதற்கு ஆயிரமாயிரம் சான்றுகளைக் கூற முடியும். இதை உணர்ந்து உப்பங்கழிகள், கழிவெளிகள் உள்ளிட்ட இயற்கைக் கொடுத்த கொடைகள், சுற்றுச்சூழல், மீனவர்களின் வாழ்வாதாரம் உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் மாமல்லன் நீர்த்தேக்கத்தை கைவிடுவதாக அரசு அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

summary

The proposed site for the Mamallan Reservoir is a natural wonder. It is here that seawater and freshwater converge, creating a unique ecosystem where rare species of crabs, prawns, and fish breed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments