சாதி, மதமற்றவர் சான்று: நடிகர் பார்த்திபன் மனு மீது அரசு பதிலளிக்க உத்தரவு
சாதி, மதமற்றவர் என சான்று வழங்க சட்டமியற்றக் கோரும் நடிகர் பார்த்திபன் வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு
ஜாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாக சான்று வழங்கும் வகையில் சட்டம் இயற்ற உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் பார்த்திபன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஜாதி, மதமற்றவர் என சான்று கோரி விண்ணப்பிப்பவர்கள் உடனடியாக சான்று பெறும் வகையில், சட்டம், அல்லது அரசாணை, சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
ஜாதி, மதமற்றவர் என சான்று கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் வகையில் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
Advertisement
Advertisement
ஆனால், அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கும், அப்போதைய அரசுக்கும் இடையில் சுமூக உறவு இல்லாததால், அந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது. தற்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை. எனவே, சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும்.
ஜாதி, மதமற்றவர் என சான்று வழங்க வகை செய்யும் சட்டம் இயற்றுவதால் வேறு எந்த சட்டத்துக்கும் எந்த பாதிப்பு ஏற்படப் போவதில்லை. தற்போது ஜாதி, மதமாற்றவர் என சான்று வழங்க சட்டங்கள் அல்லது உத்தரவுகள் ஏதும் இல்லை. எனவே புதிதாக சட்டம் இயற்றும்போது, ஜாதி, மதமற்றவர் என சான்று கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு உள்துறை, வருவாய் மற்றும் சட்டத் துறை செயலர்கள் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Certificate for no caste religion: Court orders govt
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.