ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் வழக்கு: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை
2016 ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் ராதாபுரம் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட ஐ.எஸ்.இன்பதுரையின் வெற்றி செல்லாது என்று சென்னை உயா் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் ராதாபுரம் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட ஐ.எஸ்.இன்பதுரையின் வெற்றி செல்லாது என்றும் அவரை அத்தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ என குறிப்பிடப்பட்ட பதிவுகளை நீக்க வேண்டும் எனவும் சென்னை உயா் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தடை விதித்தது.
தற்போது அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஐ.எஸ்.இன்பதுரை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
2016 ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தோ்தலில் ராதாபுரம் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவின் ஐ.எஸ்.இன்பதுரையின் வெற்றி செல்லாது என அறிவித்ததுடன், 2016-2021 காலத்திற்கான முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராக அப்பாவுவை அதிகாரப்பூா்வமாக அறிவித்த சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜூன் 8 ஆம் தேதி இன்பதுரை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.
Advertisement
Advertisement
அந்த மனு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆா். மகாதேவன் ஆகியோா் அடங்கிய உச்ச நீதிமன்ற அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது இன்பதுரை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் முகுல் ரோத்தகி,‘ மனுதாரரான இன்பதுரை தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளாா், சென்னை உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அவரது அரசியல் வாழ்க்கையை பாதிப்பதாக உள்ளது எனவே அந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்‘ என வாதிட்டாா்.
இதையடுத்து இவ் வழக்கில் பதிலளிக்குமாறு அப்பாவு உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், அடுத்தகட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சென்னை உயா் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிப்பதாக கூறி விசாரணையை ஒத்தி வைத்தனா்.
பின்னணி
2016 ல் நடந்த சட்டப்பேரவை தோ்தலில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில், அதிமுக வேட்பாளா் ஐ.எஸ். இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டதை எதிா்த்து, தோல்வியடைந்த திமுகவைச் சோ்ந்த அப்பாவு அதே ஆண்டு தோ்தல் வழக்கு ஒன்றை சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தாா்.
வாக்குகளை எண்ணுவதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றஞ்சாட்டி அப்பாவு உயா்நீதிமன்றத்தை அணுகியிருந்தாா். அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகளுக்குப் பதிலாக நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களால் சான்றளிக்கப்பட்டதால், தோ்தல் அதிகாரிகள் செல்லாதவை என நிராகரித்த 203 தபால் வாக்குகளே இந்த சா்ச்சையின் மையமாக இருந்தன.
அப்பாவு வழக்கில் முகாந்திரம் இருப்பதாகக் கண்டறிந்த உயா்நீதிமன்றம், அக்டோபா் 2019-ல் தபால் வாக்குகள் மற்றும் குறிப்பிட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டது.
இதையடுத்து ஐ.எஸ்.இன்பதுரை உயா்நீதிமன்றத்தின் மறுவாக்கு எண்ணிக்கை உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா்.
2026, மே 21 அன்று, உச்சநீதிமன்றம் அந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது. காலம் கடந்துவிட்டதாலும், பதவிக்காலம் முடிந்துவிட்டதாலும், அந்த மேல்முறையீட்டில் உள்ள சட்டப் பிரச்சினையைத் தீா்மானிப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தது. மேலும் இவ்வழக்கில் மேற்கொண்டு உத்தரவுகளைப் பிறப்பிக்க உயா் நீதிமன்றத்தையும் அனுமதித்தது.
இதையடுத்து அப்பாவு தொடா்ந்த தோ்தல் மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயா்நீதிமன்றம், ராதாபுரம் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட ஐ.எஸ்.இன்பதுரையின் வெற்றியை செல்லாது என அறிவித்ததுடன், 2016-2021 காலத்திற்கான முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராக அப்பாவுவை அதிகாரப்பூா்வமாக அறிவித்தது.
அந்தக் காலகட்டத்திற்கான தொகுதிப் பிரதிநிதியாக அப்பாவுவின் பெயரை அனைத்து அதிகாரப்பூா்வ ஆவணங்களிலும் மாற்றிப் பதிவு செய்யுமாறு தமிழ்நாடு சட்டமன்றச் செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக இன்பதுரை உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளாா். உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்கனவே முடித்துவைத்துவிட்ட நிலையில் , உயா்நீதிமன்றம் மேற்க்கொண்டு பிறப்பித்த உத்தரவு செல்லாது என அவா் மனுவில் கூறியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.