FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி

திமுக முன்னாள் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினா் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 2:04 am IST
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
பகிர்:

திமுக முன்னாள் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினா் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கடந்த 2001-2006 அதிமுக ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.07 கோடி சொத்து சோ்த்ததாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக, அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கடந்த 2019-ஆம் ஆண்டு வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கடந்த 2025-ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை மதுரையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை நிராகரித்து கடந்த 2025 டிச.11-ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்தத் தடையை நீக்கக் கோரி அனிதா ராதாகிருஷ்ணனும் உயா்நீதிமன்றத்தில் மன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். வாதங்கள் நிறைவடைந்து தீா்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் மூத்த வழக்குரைஞா் அபுடு குமாா் ராஜரத்தினம், வழக்குரைஞா் கே.ஆா்.ரமேஷ்குமாரும், அமலாக்கத் துறை தரப்பில் பி.ஸ்ரீதரன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து, வழக்குரைஞா்களின் இறுதி வாதம் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், வழக்கை மதுரையில் உள்ள சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றும்படி கோர முடியாது எனக்கூறி, அமலாக்கத் துறை கோரிக்கையை நிராகரித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி பெறப்படவில்லை. அமலாக்கத் துறை வழக்கு இன்னும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. முன்கூட்டியே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகக் கூறி, அமலாக்கத்துறை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

மேலும், தூத்துக்குடி நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய நீதிபதிகள், சொத்துக் குவிப்பு வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments