மீன்பிடி உதவித்தொகை ரூ. 7000-ஆக உயர்வு! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!
மீன்பிடி உதவித்தொகை ரூ. 7000-ஆக உயர்த்தப்படும் என அறிவிப்பு.
பணியில்லாக் கால மீன்பிடி உதவித்தொகையை ரூ. 6,000-லிருந்து ரூ. 7,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட் அறிவிப்பில் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் என். மரிய வில்சன் இன்று(ஆக. 5) தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அவர் மீன்வளம் மற்றும் மீனவர் நலனுக்கு வெளியிட்ட அறிவிப்பில்,
Advertisement
Advertisement
"மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு சமூகநலத் திட்டங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
மீனவர்களுக்காக, மீன்பிடிப்பு குறைவு மற்றும் தடைக்கால நிவாரணம், மானிய விலையில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய், மீனவர்களுக்குத் தேவையான நிலையான உள்கட்டமைப்பினை உருவாக்கும் விதமாக மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள், மீன் பண்ணைகள், மீன்பிடி கிராமங்களில் கடல் அரிப்பைத் தடுக்கும் பொருட்டு தூண்டில் வளைவுகள், அலை தடுப்புச் சுவர்கள் என அனைத்து வகையிலும் இத்தொழில் மேம்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு, மாநில அரசு ஒரு குடும்பத்திற்கு ரூ. 6,000 என்ற அளவில் பணியில்லாக் காலம் மீன்பிடி உதவித்தொகையாக வழங்கி வருகிறது. இந்த அரசு தற்போது, பணியில்லாக் கால மீன்பிடி உதவித்தொகையை 6,000 ரூபாயிலிருந்து 7,000 ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம், 1.93 லட்சம் பாரம்பரிய மீனவர் குடும்பங்கள் பயனடையும்.
இத்திட்டத்தினை நிறைவேற்றுவதற்காக ரூ. 135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
நமது பாரம்பரிய மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில், நவீன பதப்படுத்தும் வசதிகள் கொண்ட ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை வாங்கும் மீனவர்களுக்கு, வட்டி மானியம் வடிவிலான நிதியுதவி வழங்கப்படும். இதற்கென நடப்பாண்டில் ரூ. 12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
Finance Minister Maria Wilson announced in the Tamil Nadu budget that the financial assistance for fishermen during the fishing ban period would be increased from rs. 6,000 to rs. 7,000.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.