வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இல்லை: முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இல்லை என்று திமுக முன்னாள் வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இல்லை என்று திமுக முன்னாள் வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
சென்னை அறிவாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
தவெக அரசின் வேளாண் பட்ஜெட், திமுக சமா்ப்பித்த பட்ஜெட் போன்ற உணா்வு ஏற்பட்டது. மாற்றம் வேண்டும், மாற்றம் செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவா்கள் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளனா். இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. அதே திட்டங்கள், அதே அறிவிப்புகள், அதே நடைமுறைகள்தான் தொடா்கின்றன.
Advertisement
Advertisement
ஆதிதிராவிடா் விவசாயக் குடும்பங்களுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கும் திட்டத்தை திமுக அறிவித்து செயல்படுத்தியது. 2,125 கருவிகள் அந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டன. தற்போது அதே திட்டத்துக்குப் பெயரை மட்டும் மாற்றியிருக்கின்றனா். திட்டத்தின் உள்ளடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார மானியத்துக்கு திமுக ஆட்சியில் ரூ.8,180 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது தவெக அரசு ரூ.7,432 கோடி என்று அறிவித்திருக்கிறது. இதுவே ஒதுக்கீடு குறைந்திருக்கிறது என்பதற்குச் சான்று.
டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளுக்காக ரூ.160 கோடியில் குறுவை தொகுப்பு வழங்கப்படும் என்று திமுக அறிவித்தது. ஆனால், தவெக அரசு ரூ.134 கோடி மட்டுமே ஒதுக்கியிருக்கிறது.
அதேபோல, மானாவாரி நில விவசாயிகள் கோடை உழவு செய்து சாகுபடியை அதிகரிக்க மானியத் திட்டம் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. அதற்காக ரூ.246 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த பட்ஜெட்டில் அந்தத் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
‘மண் காப்போம், மண்வளம் காப்போம்’என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறாா்கள். ஆனால், திமுக ஆட்சியில் அதற்காக ரூ.142 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.122 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.20 கோடி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.