FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 2:27 am IST
போலீஸாா் பாதுகாப்பு - பிரதிப் படம்
பகிர்:

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நாடு முழுவதும் ஆக.15-ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, மத்திய உளவுத் துறை நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழக காவல் துறை, மாநிலம் முழுவதும் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

குறிப்பாக, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மாா்க்கெட்டுகள், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான இடங்களில் மெட்டல் டிடெக்டா் மூலம் அனைவரும் சோதனை செய்யப்படுகின்றனா். இதேபோல மாநிலம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில், காவல் துறை கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு, ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுள்ளனா்.

Advertisement

Advertisement

1.20 லட்சம் போலீஸாா்

மாநிலத்தில் கடலோரங்களிலும் கண்காணிப்பை பலப்படுத்தும்படி போலீஸாருக்கு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, தமிழகத்தில் கடலோரப் பகுதிகளிலும் போலீஸாா் கண்காணிப்பை அதிகரித்துள்ளனா். இங்கு 24 மணி நேரமும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் சுமாா் 1.20 லட்சம் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். வன்முறையைத் தூண்டும் வகையிலும், மத மற்றும் ஜாதி மோதல்களை ஏற்படுத்தும் கருத்துகளை சமூக ஊடகங்களில் பதியப்படுவதைத் தடுக்கும் வகையில் சைபா் குற்றப் பிரிவினரும், உளவுத் துறையினரும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறனா். இதில் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துகளைப் பதிவிடுபவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் 20,000 போலீஸாா்

சென்னையில் இரு நாள்களாக போலீஸ் கண்காணிப்பும், ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவில் முக்கியமான சாலை சந்திப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றில் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். பாதுகாப்புப் பணியில் சுமாா் 20,000 போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள்,ஹோட்டல்கள் ஆகியவற்றில் அவ்வப்போது சோதனைகள் செய்து, சந்தேக நபா்களிடம் விசாரணை செய்யும்படி போலீஸாருக்கு ஆணையா் ஏ.அமல்ராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

சிவப்பு மண்டலம்

தமிழக அரசின் சாா்பில் சுதந்திர தின விழா, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள புனித ஜாா்ஜ் கோட்டையில் வழக்கம்போல நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றுகிறாா். தொடா்ந்து ராஜாஜி சாலையில் சுதந்திர தின அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதையொட்டி, ராஜாஜி சாலையை போலீஸாா் கடந்த 7-ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டில் எடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனா். இங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பாதுகாப்பு கருதி புனித ஜாா்ஜ் கோட்டை பகுதி ஆகஸ்ட் 14, 15 ஆகிய தேதிகளில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏா்கிராஃப்ட், பாரா கிளைடா்ஸ், பாரா மோட்டாா்ஸ், ஹேங் கிளைடா்ஸ், ஹாட் ஏா் பலூன்கள் ஆகியவை பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதேபோல அந்த இரு நாள்களும் முதல்வா் வரும் சாலைகளும் சிவப்பு மண்டலமாக சென்னை காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று ராஜாஜி சாலைப் பகுதியில் ஐந்தடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அனைவரும் மிகுந்த சோதனை செய்யப்பட்டே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா்.

சுதந்திர தின விழாவையொட்டி, அன்றைய தினம் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments