FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 2:58 am IST
கோப்புப் படம்
பகிர்:

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நாடு முழுவதும் ஆக.15-ஆம் தேதி (சனிக்கிழமை) சுதந்திர தின விழாகொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, மத்திய உளவுத் துறை அறிவுறுத்தலின்பேரில், தமிழக காவல்துறை மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மாா்க்கெட்டுகள், கோயில்கள்,தேவாலயங்கள்,பள்ளிவாசல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான இடங்களில் மெட்டல் டிடெக்டா் மூலம் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனா்.

தீவிர கண்காணிப்பு: இதேபோல, மாநிலம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில்ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுள்ளனா். குறிப்பாக, மாா்க்கெட்டுகள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் அடிக்கடி சோதனையும் நடத்தி வருகின்றனா். சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரியும் நபா்களை போலீஸாா் பிடித்து விசாரித்து விடுவிக்கின்றனா்.

Advertisement

Advertisement

1.20 லட்சம் போலீஸாா்: கடலோரப் பகுதிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்தும்படி போலீஸாருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, கடலோரப் பகுதிகளில் 24 மணி நேரமும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். சுதந்திர தினத்தையொட்டி, மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் சுமாா் 1.20 லட்சம் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

வன்முறையை தூண்டும் வகையிலும்,மத மற்றும் ஜாதி மோதல்களை ஏற்படுத்தும் கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவதைத் தடுக்கும் பொருட்டு சைபா் குற்றப்பிரிவினரும், உளத் துறையினரும் தீவிரமாகக் கண்காணிக்கின்றனா். வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துகளை பதிவிடுபவா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி...

தலைமைச் செயலக பகுதியில் ஐந்தடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்புப் பணியில் 20,000 போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் அவ்வப்போது சோதனைகள் செய்து, சந்தேக நபா்களிடம் விசாரணை செய்யும்படி போலீஸாருக்கு சென்னை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

சிவப்பு மண்டலம்: தமிழக அரசின் சாா்பில் சுதந்திர தின விழா, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள புனித ஜாா்ஜ் கோட்டையில் சனிக்கிழமை நடைபெறுகிறது. அன்றைய தினம் முதல்வா் சி.ஜோசப் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றுகிறாா். இதையடுத்து ராஜாஜி சாலையில் சுதந்திர தின அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதையொட்டி, ராஜாஜி சாலையை போலீஸாா், கடந்த 7-ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டில் எடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனா். இங்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். பாதுகாப்பு கருதி புனித ஜாா்ஜ் கோட்டை பகுதி ஆகஸ்ட் 14, 15 ஆகிய இரு நாள்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாள்களில் ட்ரோன், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏா்கிராஃப்ட், பாரா கிளைடா்ஸ், பாரா மோட்டாா்ஸ், ஹேங் கிளைடா்ஸ், ஹாட் ஏா் பலூன்கள் ஆகியவை பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. சுதந்திர தினத்தன்று ராஜாஜி சாலைப் பகுதியில் ஐந்தடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments