சொந்தமாக வீடு, மனை வாங்க வாய்ப்பு! தமிழக அரசு அறிவிப்பு!
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் பல்வேறு திட்டங்களில் விற்பனைக்கு உள்ள 7,659 அலகுகள்.
வீட்டுவசதி வாரியத்தின் பல்வேறு திட்டங்கள் மூலம் விற்பனைக்கு உள்ள 7659 வீடு, மனை வாங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் விற்பனைக்குரிய வீடு மற்றும் மனைகளை இணையதளம் மூலமாக விற்பனை செய்திட இணையவழி விற்பனை தளத்தை இன்று(ஆக. 12) தொடக்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
Advertisement
Advertisement
தமிழ்நாடு முதல்வர் நல்வழிகாட்டுதலின்படி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் விற்பனைக்குரிய வீடு மற்றும் மனைகளை இணையதளம்மூலமாக விற்பனை செய்திட இணையவழி விற்பனைத் தளத்தை இன்று சென்னை, நாமக்கல் கவிஞர் மாளிகை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூட்ட அரங்கில் தொடக்கி வைத்தார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் மனைகள் மற்றும் வீடுகள் கடந்த ஆண்டு 2630 அலகுகள் மட்டும் மின்னணு முறையில் விற்பனை செய்யப்பட்டது.
தற்பொழுது, இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் பல்வேறு திட்டங்களில் விற்பனைக்கு உள்ள 7,659 அலகுகளில் 1) 21.08.2026 முதல் குலுக்கல் முறையில் – 2,842 அலகுகளுக்கும், 2) 24.08.2026 முதல் முதலில் வருவோருக்கு முதலில் முன்னுரிமை அடிப்படையில் (FCFS) – இடஒதுக்கீடு விகிதாச்சார முறையில் – 2,184 அலகுகளுக்கும், 3) 25.08.2026 முதல் பொது ஒதுக்கீடு முறையில் (Common Pool) இட ஒதுக்கீடு விகிதாச்சாரமின்றி, முதலில் வருவோருக்கு முதலில் முன்னுரிமையில் – 1,749 அலகுகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்காக Tamil Nadu Housing Board Online Portal-இல் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்றைய நாளிலிருந்து 7 நாள்கள் கடந்து விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம். பொதுமக்கள் பின்வருவனவற்றினை தயார் செய்ய மேற்படி கால இடைவெளியினை பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
* இணையதளத்தில் உள்நுழைவு செய்வதற்கான பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் (User ID and Password)
* இணைய தளத்தில் உள்ள விவரங்கள் அடிப்படையில் அல்லது திட்டப் பகுதிக்கு நேரடியாகச் சென்று விருப்பமான அலகினை தெரிவு செய்து கொள்ளலாம்.
* இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளலாம்.
* முன்பதிவு செய்வதற்கான கட்டண தொகையினை செலுத்துவதற்கு ஏதுவாக தங்களது வங்கி பணப் பரிவர்த்தனை வரம்பினை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.
* எந்தெந்த பிரிவில் விண்ணப்பிக்கப்படுகிறதோ, அதற்கான நிபந்தனைகளை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும், விற்பனைக்கு தயாராக உள்ள 884 வணிக அலகுகள் (கடைகள் / பிரதான வணிக மனைகள் மற்றும் பொது உபயோக மனைகள்) e-Tender cum e-Auction முறையில் 25.08.2026 முதல் 24.09.2026 வரை மின் ஏலத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தளம் Tamil Nadu e-Tenders Portal ஆகும்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் வெளிப்படையான இந்த செயல்பாடு, பொதுமக்களுக்கு வீடு மற்றும் மனைகளை வாங்குவதற்கான வாய்ப்புகளை பெருமளவில் அதிகரிப்பதுடன், வெளிப்படைத்தன்மையும் உறுதி செய்யப்படுகின்றது. மேலும் விற்பனைக்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இவ்வாண்டில் விலை உயர்வு ஏதும் செய்யாமல் விற்பனை செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட தேதிகளுக்குள் இணையவழி விற்பனைத் தளம் மூலம் விண்ணப்பித்து (அல்லது) முன்பதிவு செய்து, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் (TNHB) வீட்டுவசதி சேவையினை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
The Tamil Nadu government has announced that applications can be submitted online to purchase 7,659 houses and plots available for sale through various schemes of the Housing Board.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.