விவசாயக் குடும்ப மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து... உயர்கல்வித் துறை அறிவிப்புகள்!
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் உயர்கல்வித் துறைக்கான அறிவிப்புகள் குறித்து...
இரண்டு ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் உள்ள விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மாணாக்கர்கள் அரசு கல்லூரிகள் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களில் படிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு முழு கல்விகட்டண விலக்கு அளிக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று (ஆக. 24) அறிவித்தார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் உயர்கல்வித் துறைக்கான அறிவிப்புகளை அமைச்சர் விஸ்வநாதன் சட்டப்பேரவையில் இன்று வெளியிட்டார்.
அதில், கல்விக் கட்டணம் ரத்து
Advertisement
Advertisement
இரண்டு ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் உள்ள விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மாணாக்கர்கள் அரசு கல்லூரிகள் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களில் படிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு முழு கல்விகட்டண விலக்கு அளிக்கப்படும்.
திருநர் மாணாக்கர்களுக்கு நிதியுதவி
உயர்கல்வி பயிலும் திருநர் மாணாக்கர்களின் கல்வி, வாழ்வாதாரம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக, அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் 50 திருநர் மாணாக்கர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் பொருட்டு தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஜெர்மன் மற்றும் ஜப்பானிய மொழிப் பயிற்சி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து வழங்கப்படும்.
பெரியார் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான நிறுவனம்
செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினியியல், உயிரித் தொழில்நுட்பம், காலநிலைத் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற வளர்ந்து வரும் துறைகளில் பட்டப்படிப்புகளை வழங்கும் வகையில், "பெரியார் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான நிறுவனம் (PIET)" அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முதற்கட்டமாக நிறுவப்படும்.
செயற்கைக்கோள் வடிவமைக்க நிதி
செயற்கைக்கோள் வடிவமைக்கும் திட்டத்திற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 10 திட்டங்களுக்கு ரூ. 5 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
வகுப்பறையில் ஸ்மார்ட் போர்டுகள்
தமிழ்நாட்டில் உள்ள 130 நிலை II (Grade II) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 260 ஊடாடும் திறன் பலகைகள் (Interactive Smart Boards) வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.