ரூ. 46 கோடியில் 134 உழவர் சந்தைகள் புதுப்பிப்பு! 1,000 உழவர் நல சேவை மையங்கள்!
2026 -27 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்...
ரூ. 46 கோடி செலவில் 134 உழவர் சந்தைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழக இடைக்கால பொது பட்ஜெட்டைத் தொடர்ந்து 2026 -27 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.
அவர் பேசுகையில்,
Advertisement
Advertisement
"முதலமைச்சரின் 1,000 உழவர் நல சேவை மையங்கள் திட்டம் மூலம் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல் பட்டதாரிகள், பட்டயதாரர்களுக்கு 30 % மானியமாக 3 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
மதிப்பு கூட்டு பொருள்கள் திட்டத்திற்காக ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 9 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
மேலும் 32 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
456 பட்டதாரி இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ 4.56 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்திற்கு ரூ. 19 கோடி வரை நிதி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 70% மானியம் வழங்கப்படுகிறது.இதன் மூலமாக 17,340 பேர் பயன்பெற்றுள்ளனர்.
மக்காச்சோளம் சாகுபடி பரப்பு 12 லட்சம் ஏக்கராக உயர்த்தப்பட்டுள்ளது.
உழவர்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும் காய்கறிகள், பழங்கள் நுகர்வோர்க்கு அன்றாடம் கிடைக்கவும் 194 உழவர் சந்தைகள் செயல்பட்டுவருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில், 15 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. 134 உழவர் சந்தைகள் ரூ. 46.45 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சிப் பகுதிகளில் 30 நடமாடும் காய்கனி அங்காடிகளும், மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தை வீதம் 37 மாவட்டங்களில் மாலை நேரங்களில் உழவர் சந்தைகளும் இயங்கி வருகின்றன.
அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டதால், உழவர்
சந்தைகளுக்கு வரும் காய்கனிகளின் தினசரி வரத்து 2,500 மெட்ரிக் டன்னாகவும், தினசரி பொதுமக்களின் வருகை தற்போது 4 இலட்சமாகவும் அதிகரித்துள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.