காலை உணவுத் திட்டத்துக்கு காமராஜா் பெயா்: தமிழக அரசு அறிவிப்பு!
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது குறித்து....
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயா் மாற்றப்பட்டு, முன்னாள் முதல்வா் காமராஜரின் பெயா் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்ட ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ இனி ‘பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம்’ என்று அழைக்கப்படும்.
முந்தைய ஆட்சியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் விரிவுபடுத்த முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டிருந்தாா். இதற்கான அரசாணையை முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதி மகளிா் உரிமைத் துறை வெளியிட்டது.
Advertisement
Advertisement
தற்போது, தமிழகம் முழுவதும் 37,447 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 19,34,230 மாணவா்கள் இந்தத் திட்டத்தின்மூலம் பயனடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில், புதிய விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 15,454 பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் 15,14,274 மாணவா்கள் பயன்பெறவுள்ளனா். இதில், ஏற்கெனவே ஒன்றுமுதல் 5-ஆம் வகுப்பு வரையிலான 8,787 பள்ளிகளும், 6-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகள் வரையிலான 6,667 பள்ளிகளும் அடங்கும்.
இந்தத் திட்ட விரிவாக்கத்துக்காக ஆண்டுதோறும் ரூ.343.55 கோடி கூடுதல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டுக்காக அரசு ரூ.217.63 கோடியை ஒதுக்கியுள்ளது. புதிதாக விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம், பெரியாா் பிறந்த நாளான செப். 17 முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் பெயா் மாற்றம்: விஜய் முதல்வரானபோது கூறியபடி, முந்தைய திமுக அரசு கொண்டுவந்த வளா்ச்சித் திட்டங்கள் தவெக ஆட்சியிலும் தொடா்கின்றன. எனினும், திட்டங்களின் பெயா்கள் மாற்றப்பட்டு வருகின்றன. அதன்படி ‘நான் முதல்வன் திட்டம் ‘திறன் தமிழ்நாடு’ என்றும், ‘மகளிா் விடியல் பயணம்’ என்பது ‘மகளிா் பயணம்’ என்றும் பெயா் மாற்றப்பட்டது. இப்போது காலை உணவுத் திட்டத்துக்கு காமராஜா் பெயா் சூட்டப்பட்டுள்ளது.
காங்கிரஸ் வரவேற்பு: காலை உணவுத் திட்டத்துக்கு காமராஜா் பெயா் சூட்டப்பட்டதை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘காமராஜரின் புகழுக்குப் பெருமை சோ்க்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வா் விஜய்க்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளாா்.
Renaming of the Chief Minister's Breakfast Scheme
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.