24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!
பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் நியமிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் பற்றி...
நாடு முழுவதும் பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 6,102 சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக மக்களவையில் மதுரை எம்பி சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சகம் பதிலளித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், “நாடு முழுவதும் பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள் எத்தனை?, ஹிந்தி அல்லாத தாய்மொழிகளுக்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு?” ஆகிய கேள்விகளை மத்திய கல்வி அமைச்சகத்திடம் மதுரை எம்பி சு. வெங்கடேசன் கேட்டிருந்தார்.
இந்த கேள்விகளுக்கு மத்திய கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் செளத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
Advertisement
Advertisement
அதில், நாடு முழுவதும் 13,092 பள்ளிகள் பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் இயங்குவதாகவும், இதனை 14,000-க்கும் மேல் உயர்த்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தரவுகளின்படி, அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 1,888 பள்ளிகள் இயங்குகின்றன. நாடு முழுவதும் சமஸ்கிருதத்துக்கு 6,102 ஆசிரியர்கள், பிற தாய்மொழிகளைக் கற்பிக்க 9,152 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் இயங்கும் 36 பள்ளிகளில் 41 சமஸ்கிருத ஆசிரியர்களும், 12 தமிழ் ஆசிரியர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தரவுகளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சு. வெங்கடேசன் தெரிவித்திருப்பதாவது:
”கொடுமை! 24,000 பேர் பேசும் சமஸ்கிருதத்தைக் கற்பிக்க 6,100 ஆசிரியர்கள் நியமனம்.
ஏழு கோடி பேசும் தமிழை கற்பிக்க 12 ஆசிரியர்கள் மட்டுமே நியமனம்.
மத்தியப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாகிவிட்டது.
இதுதான் பிரதமர் மோடி பெருமை பேசும் 'பிஎம் ஸ்ரீ' பள்ளியின் புள்ளிவிவரம்.
மும்மொழி என்பது இந்தி, சமஸ்கிருதத் திணிப்புதான். மாநில மொழி ஊக்குவிப்பு என்பது ஏமாற்று. அமைச்சர் பதிலில் அம்பலம்.
பி.எம்.ஶ்ரீ திட்டம் என்பதில் நாங்கள் மும்மொழியை வலியுறுத்துவது இந்திய மொழிகளை, மாநில மொழிகளை வளர்ப்பதற்கே என்று மத்திய ஆட்சியாளர்கள் வாய் பந்தல் போட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் இந்த பதிலில் சமஸ்கிருத ஆசிரியர்களே அதிக அளவில் 6,102 பேர் நியமிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளிலேயே மிகக் குறைவான பேர் அதாவது 24,821 பேர் மட்டுமே அதாவது 0.002 சதவிகிதம் பேர் பேசுகிற சமஸ்கிருதத்திற்கு 6,102 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது சாக்குக்குள் ஒளிந்திருக்கும் பூனை சமஸ்கிருதம் என்பதைத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது.
இரண்டாவது மொழியாக, மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தைப் பேசுபவர்களைச் சேர்த்தால் கூட ஒரு சதவீதம் கூட வரவில்லை. கால் சதவீதமே ஆகும். ஒளியாத பூனையாக இந்தி ஏற்கனவே சுற்றி வந்து கொண்டிருக்கிறது.
அவிழ்த்துவிட்ட கதைகள்;
அமைச்சரின் பதிலில் மாநில மொழி என தரப்பட்டுள்ள எண்ணிக்கை அந்தந்த மாநிலத்தின் மொழிகள் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. காரணம் மொழி வாரியாக பட்டியல் என்றே பதிலில் தரப்பட்டுள்ளது. வேறு மாநில மொழிகள் எனில் அந்த விவரம் தரப்பட்டிருக்கும்.
மத்தியப் பிரதேசத்தில், ராஜஸ்தானில், உத்தரப் பிரதேசத்தில் தமிழ் மூன்றாம் மொழியாக வரலாம் என்றெல்லாம் இங்கு கதைகளை அவிழ்த்து விட்டார்கள். ஆனால் சமஸ்கிருத ஆசிரியர்கள் மத்தியப் பிரதேசத்தில் 1,211 பேர். இது அங்குள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை விட அதிகம் (944 பள்ளிகள்). ஒரு பள்ளிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பிகார், ஒடிசா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களின் பி.எம்.ஶ்ரீ பள்ளிகள் அனைத்திலும் சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர்.
தாய்மொழியைப் பாதுகாத்து வளர்ப்பதுதான் புதிய கல்விக் கொள்கையும், பி.எம்.ஶ்ரீ பள்ளிகளும் என்று பெருமை பேசும் பிரதமர் மோடியின் மும்மொழிக் கொள்கையை இந்தப் புள்ளிவிபரம் முழுமுற்றாக அம்பலப்படுத்திவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
6,102 teachers to teach Sanskrit, spoken by 24,000 people - Just 12 for Tamil, spoken by 7 crore people
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.