தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்
தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நாள்களுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
காவிரியில் தமிழத்துக்கு 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறப்பதில் முட்டுக்கட்டை போட்டுவந்த நிலையில் தில்லியில் இன்று கூடிய காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இது இந்த மாதத்தில் நடைபெற்ற இரண்டாவது கூட்டம்.
தில்லியில் இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு ஒரு நாளைக்கு 3,500 கன அடி வீதம் 15 நாள்களுக்கு 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேக்கே தாட்டு பகுதியில் கர்நாடகம் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று தமிழகம் வலியுறுத்தி வரும் நிலையில் ஆணையக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அரசு அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.
தமிழக அரசின் சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற நீர்வளத் துறை முதன்மைச் செயலர் சத்யப்ரதா சாஹூ, காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் ஆர். சுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள், தமிழ்நாட்டுக்கு உரிய நீர்ப் பங்கை வழங்குமாறு வலியுறுத்தியிருந்தனர்.
தில்லி பிகாஜி காமா பிளேஸில் உள்ள எம்டிஎன்எல் கட்டடத்தின் மேல் தரைத்தளத்தில் உள்ள அந்த ஆணையத்தின் குழு அறையில் இணையவழி மற்றும் நேரடி பங்கேற்பு முறையில் இந்தக் கூட்டம் நடைபெற்றிருந்தது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (சிடபிள்யுஎம்ஏ ) 53-ஆவது கூட்டம் கடந்த 22-ஆம் தேதி தில்லியில் நடைபெற்றிருந்த நிலையில், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக இன்றும் கூட்டம் நடைபெற்றது.
4 TMC of water released to TN Cauvery Management Authority
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.