அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்தது தவெக: முதல்வர் விஜய்
தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் சேர்ந்து பேரம் பேசி ஆட்சி அமைத்து கொள்ளை அடிக்க திட்டமிட்டதாக முதல்வர் விஜய் குற்றச்சாட்டு.
தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டு காலமாக இருந்த சாதி, மத அரசியலை தமிழக வெற்றிக் கழகம் உடைத்துள்ளதாக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூன் 1) தெரிவித்தார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தவெக தலைவர் விஜய் இன்று திருச்சிக்கு பயணம் மேற்கொண்டு, வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி ஜோசப் கல்லூரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் அரசியல் மாற்றம் குறித்து முதல்வர் விஜய் பேசியதாவது:
''திமுக மாடல் அரசில் ஒரு தெருவிடாமல் போதைப்பொருள் கலாசாரம் கொட்டிக்கிடக்கிறது. இதை முன்பே செய்திருந்தால், பெண்களுக்கு அநீதி நடந்திருக்குமா?
ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு மக்கள் மனதை வெல்ல பார்க்க வேண்டும். அதை விடுத்து மக்களை ஏமாற்ற நினைக்காதீர்கள்.
அண்ணா ஆரம்பித்த கட்சியை அடிமை கட்சியாக்கிவிட்டு, உடன்பிறப்பே வெளியே வா என்று கூறுகிறார் மு.க. ஸ்டாலின். திமுக தோல்விக்கு வெளியே காரணம் தேடாதீர்கள். உங்கள் வீட்டில் தேடுங்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்களே திமுக தோல்விக்கு காரணம் என்று உங்கள் தொண்டர்கள் கூறுகின்றனர்.
திமுக மாடல் அரசில் ஒரு தெருவிடாமல் போதைப்பொருள் கலாசாரம் கொட்டிக்கிடக்கிறது. இதை முன்பே செய்திருந்தால், பெண்களுக்கு அநீதி நடந்திருக்குமா? அவர்கள் தவறு செய்துவிட்டு, பழியை என் மீது சுமத்துகிறார்கள்.
தகுதி வாய்ந்த அதிகாரிகளை காவல் துறையில் நியமித்திருக்கிறேன். என்ன பழி போட்டாலும் உண்மையாக உறுதியாக மக்களுக்குத் தேவையான திட்டங்களை செய்துகாட்டுவேன். அவர்கள்தான் (திமுக) ஆட்சியிலேயே இல்லையே. அவர்களை ஏன் குறை கூறுகிறீர்கள் என்று சிலர் பேசுவார்கள். தவறு செய்தது யார் என்று மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் இல்லையா?
தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் ஒன்றாக சேர்ந்து யாருக்கும் தெரியாமல் மூலையில் அமர்ந்து பேரம் பேசி ஆட்சி அமைத்து கொள்ளை அடிக்கத் திட்டமிட்டனர்.
நிதி நெருக்கடி ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளது திமுக. அதை சரி செய்ய வேண்டாமா? அதை சரி செய்துவிட்டு பிறகு களத்தில் இறங்குகிறேன்.
பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டுமே எனக்கு இரண்டு கண்கள் மாதிரி. திருச்சி கிழக்கு என் செல்லப் பிள்ளை மாதிரி. வரும் இடைத்தேர்தலில் உங்களில் ஒருவரையே வேட்பாளராக நிறுத்தப்போகிறோம்.
விஜய்யை வெற்றிபெற வைத்ததைப்போல, இடைத்தேர்தலில் நான் முன்னிருத்தும் சாமானியரையும் நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
என்னை வெற்றி பெற வைத்த தமிழக மக்களுக்கும் திருச்சி கிழக்கு மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நம்பிக்கையோடு இருங்கள். வெற்றி நிச்சயம்'' எனக் குறிப்பிட்டார்.