FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் விவகாரம்: நிர்மல்குமாரின் பேச்சுக்கு தமிழிசை கண்டனம்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்...

Updated On : 6 ஜூன் 2026, 4:01 pm IST
நிர்மல்குமார் | தமிழிசை - கோப்புப்படம்
பகிர்:

திருப்பரங்குன்றத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்னால் என்ன நிலைமை இருந்ததோ, அதைத்தான் கடைப்பிடிப்போம் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறியதற்கு தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், தொழில்நுட்ப முறைகளினால் வெற்றிபெற்று விட்டு இப்போது ஊடகங்கள் தேவையில்லை என்பதுபோல நிர்மல்குமார் பேசுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

Advertisement

Advertisement

"மதுரையில் பேட்டி கொடுத்த தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமாரின் பேட்டியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

திருப்பரங்குன்றத்தில் உரிமையை நிலைநாட்டுவதற்கு போராடுவதை ஏதோ அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதை போல உருவகப்படுத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் என்ன நிலைமை இருந்ததோ அதைத்தான் கடைப்பிடிப்போம் என்று சொல்கிறாரே.. ஏன் மாற்றம் வேண்டும் என்று கேட்கிறாரே அப்படி என்றால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் என்ன நிலைமை இருந்ததோ அந்த நிலைமை இருக்கட்டும் என்றால், நீங்கள் எல்லாம் எப்படி வந்தீர்கள், ஏன் வந்தீர்கள்? என்று தமிழக மக்கள் கேட்கலாமா?

திருப்பரங்குன்றத்தில் பெரும்பான்மை மக்களின் உணர்வுகள் மதிக்கப்படாததால் தான் முந்தைய அரசு புறந்தள்ளப்பட்டது. ஏதோ நீங்கள் எல்லாம் அவசர காலத்தில் அடித்த விசில் சத்தத்தில் வெற்றி பெற்று விட்டீர்கள். அதனால் உரிமைக்காக போராடும் மக்களின் உரத்த குரல் உங்கள் காதில் விழாது.

அதுமட்டுமல்ல அமைச்சரின் பேட்டி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையோ வழக்கத்தையும் மதித்ததாக தெரியவில்லை. அதுமட்டுமல்ல மக்களுக்கு வேண்டியவற்றை தெரியப்படுத்த வேண்டும் என்றும் மக்களுக்கு எதிரான நிகழ்வுகள் நடக்கும் பொழுது எல்லா தலைவர்களும் பேட்டி கொடுக்கும் முறையை கையாளுகிறார்கள்.

ஆனால் அந்த முறையையும் மின்சார அமைச்சர் கொச்சைப்படுத்துகிறார். முதலில் பத்திரிகையாளர்கள் இதற்கு எதிர்ப்பு கேள்வி கேட்டிருக்க வேண்டும். தங்கள் இருப்பை காட்டிக் கொள்வதற்கே பலர் பத்திரிகையை சந்திப்புகளை சந்திக்கிறார் என்று பத்திரிகையாளர்களை மதித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துபவர்களை இவர் கொச்சைப்படுத்துகிறாரா?

இன்றைய தொழில்நுட்ப முறைகளினால் தங்கள் வெற்றியைப் பெற்று விட்டு சில ஆண்டுகளுக்கு முன்னால் பத்திரிகை அறிக்கைகள்தான் இருந்தது, இந்த ஊடகங்கள் எல்லாம் தேவையில்லை என்று சொல்வது வியப்பாக இருக்கிறது. ஆக தவெக கட்சி சார்ந்த அமைச்சர்கள் யாரும் தங்கள் துறையில் உள்ள பிரச்சனைகளை பார்க்காமல் சரியாக அணுகாமல் தமிழகத்தின் உணர்வு பூர்வமான பிரச்னைகளை மேம்போக்காக அணுகி பேட்டிகள் கொடுப்பது அவர்களுக்கு தமிழக மக்களின் மீது அக்கறையின்மையே காண்பிக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை தடுக்கும் எண்ணத்தைவிட முதலில் தமிழகத்தின் நிலவும் மின்வட்டையும் அந்த துறையில் உள்ள முறைகேடுகள், கேடுகளையும் களைவதில் அமைச்சர் அக்கறை செலுத்தினால் நலமாக இருக்கும். விளக்கேற்றுவோம் ஒளி வேண்டும் என்கிறார்கள் மக்கள். மின்வெட்டு ஏற்படுத்தி தமிழகத்தை இருட்டாக்குவோம் என்கிறார் அமைச்சர்" எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக அமைச்சர் நிர்மல் குமார் இதுபற்றி, "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதையே தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இதில் மதவாத சக்திகள் நுழைந்து அரசியல் செய்ய நாங்கள் அனுமதிக்கமாட்டோம்" என்றார்.

அதேபோல 'முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை' என்றும் 'முன்பெல்லாம் ஊடக அறிக்கையை, அச்சு ஊடகங்கள் மூலமாகவே மக்களுக்கு செய்திகள் கொண்டுசேர்க்கப்படும்' என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

summary

Thiruparankundram issue: Tamilisai condemns Nirmal Kumar remarks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments