இயக்குநர் பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் புகழஞ்சலி!
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளதைப் பற்றி...
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் முதன்மையானவர்களில் ஒருவரான பாரதிராஜா வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
அவரது மறைவைத் தொடர்ந்து முதல்வர் விஜய், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
Advertisement
Advertisement
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் இழப்புக்கு அவருடன் பணியாற்றி, அவர் இயக்கத்தில் நடித்தவர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் அவரது புகைப்படத்துடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாரதிராஜாவின் மறைவையொட்டி, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “தமிழ் கிராமங்களின் காதலையும், உயிரோட்டத்தையும் உங்களைப் போல யாரும் திரையில் காட்டவில்லை. உங்கள் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டி பலருக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும்.
என் இசையை தென்னிந்தியாவின் மிகத் தொலைதூர கிராமங்களுக்குக் கொண்டு சென்றதற்கும், அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி. அமைதியாக இளைப்பாறுங்கள், பாரதிராஜா அவர்களே” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாரதிராஜாவின் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான கிழக்குச் சீமையிலேயே படத்தின் மூலமாக கிராமிய இசை ரசிகர்களை தன்வசப்படுத்திய ஏ.ஆர். ரஹ்மான், அதைத்தொடர்ந்து 1994 ஆம் ஆண்டில் கருத்தம்மா, 1996 ஆம் ஆண்டில் அந்திமந்தாரை, 1999 ஆம் ஆண்டில் தாஜ்மஹால், 2004 ஆம் ஆண்டில் கண்களால் கைது செய் என மொத்தமாக பாரதிராஜாவின் இயக்கத்தில் 5 படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளது நினைவுகூரத்தக்கது.
Music composer A.R. Rahman has paid tribute to Bharathiraja, stating that he was the one who took his music to the most remote villages of South India.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.