தவெக அரசுக்கு அண்ணாமலை வரவேற்பு! திமுக அரசின் ஊழல் விவரங்கள் பட்டியலும் வெளியீடு!!
முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீதான லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைக்கு தவெக அரசுக்கு அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளதைப் பற்றி...
முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீதான லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைக்கு தமிழக வெற்றிக் கழக அரசுக்கு அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், திமுகவின் சட்டப்பேரவை கொறடாவுமான எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று (ஜூன் 25) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீடு, திருவண்ணாமலையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதிலும் மொத்தம் 13 இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் நெடுஞ்சாலைத்துறை சார்ந்த ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும், சோதனையின் போது கணக்கில் வராத ரூ.40 லட்சம் சிக்கியதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல் தெரிவித்திருந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், இது நம்ம இயக்கத்தில் தலைவருமான அண்ணாமலை, எ.வ. வேலு மீதான நடவடிக்கைக்காக தவெக அரசுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து ஒரு பட்டியலையும் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலையின் பதிவில், ”தமிழக வெற்றிக் கழக அரசின் வழிகாட்டுதலின் கீழ், லஞ்ச ஒழிப்புத்துறை 2022-ஆம் ஆண்டில் சாலை ஒப்பந்தங்களில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய பிற இடங்களில் நேற்று சோதனை நடத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, தவெக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை நான் வரவேற்கிறேன். இந்த வழக்குகளில் தவெக அரசு விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் நம்புகிறேன். இந்தச் சூழலில் கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெற்ற சில ஊழல்கள் குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க வேண்டும் என்று தவெக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
ஊழல் பட்டியல்
பிஜிஆர் எரிசக்தி மோசடி - விதிகளை மீறியது, மீண்டும் ஒப்பந்தம், அதன்பின்னர் ரத்து.
ஊட்டச்சத்து கிட் மோசடி - ஆவின் நிறுவனம் உற்பத்தி செய்ய முன்வந்த போதிலும், ஹெல்த் மிக்ஸை தனியாரிடமிருந்து அதிக விலைக்கு கொள்முதல் செய்தது.
பொங்கலுக்கு வழங்கப்பட்ட வேட்டி ஊழல் – பருத்திக்குப் பதிலாக அதிகப்படியான பாலியஸ்டர் பயன்படுத்தப்பட்டது. அதற்கான ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
போக்குவரத்துத் துறை மோசடிகள் - சாலைப் பாதுகாப்பு பிரதிபலிப்பான்களில் கொள்முதலில் மோசடி
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மோசடி” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.