அதிமுகவில் மீண்டும் பிளவு? இபிஎஸ் கூட்டத்தை புறக்கணிக்கும் எஸ்.பி. வேலுமணி அணி?
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்...
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை(ஜூலை 1) நடைபெறவுள்ள அதிமுக மகளிர் அணி கூட்டத்தை புறக்கணிக்க எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அதிமுகவில் இபிஎஸ் அணி, எஸ்.பி. வேலுமணி அணி என இரண்டாகப் பிரிந்தது.
எஸ்.பி. வேலுமணி அணியில் சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலர் இருந்தனர். இதன்பின்னர் பல்வேறு கட்ட அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு இரு அணிகளும் இணைந்தன.
Advertisement
Advertisement
எஸ்.பி. வேலுமணி அணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்பட 6 பேர் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர். இதில், 4 பேர் ஏற்கெனவே தவெகவில் இணைந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களின் ஆதரவாளர்களுடன் நாளை மறுநாள் முதல்வர் விஜய் முன்னிலையில், தவெகவில் இணையவுள்ளனர்.
இந்த நிலையில், அதிமுகவில் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளுக்கு கடந்த வாரம் மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், மீண்டும் வழங்கப்பட்ட கட்சிப் பொறுப்புகளில் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், கட்சிப் பதவி மீண்டும் வழங்கப்பட்டதற்காக எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்துப் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை(ஜூலை 1) நடைபெறவுள்ள அதிமுக மகளிர் அணி கூட்டத்தை புறக்கணிக்க அவர்கள் முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தங்களின் அதிருப்தி குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் வழங்க அவர்கள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே இரண்டு முன்னாள் அமைச்சர்கள் அதிமுகவிலிருந்து விலகி, தவெகவில் இணையவிருக்கும் சூழலில், கட்சிக்குள் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Again split in the AIADMK? Is the S.P. Velumani faction boycotting EPS's meeting?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.