திமுக காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா? விஜய் கடும் கண்டனம்!
பெரம்பூரில் தவெக பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு விஜய் கண்டனம்..
பெரம்பூரில் தவெக பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதல் என்றும் திமுக அரசின் அப்பட்டமான அடக்குமுறை என்றும் விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தவெக தலைவர் விஜய் நாளை(மார்ச் 28) முதல் தனது பிரசாரத்தைத் தொடங்கவிருந்தார்.
Advertisement
Advertisement
நாளை காலை 10 மணிக்கு பெரம்பூர் எம்கேபி நகர் பேருந்து நிறுத்தம் அருகே பிரசாரத்திற்கு திட்டமிட்டிருந்த நிலையில், அந்த இடத்தில் 3,000 பேர் கூடினால் அசம்பாவிதம் நிகழும் என காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. வேறு இடத்தைத் தேர்வு செய்து காவல்துறையிடம் அனுமதி பெறுமாறு தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இதுபற்றி விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும்.
நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.
ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன??
இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3,000 பேர் கூட முடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா? தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்" என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும்.
தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி!" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே தாமதமாக விண்ணப்பித்ததால் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெறவிருந்த தவெக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Vijay condemns denial of permission for TVK campaign in Perambur
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.