அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: இபிஎஸ் விமர்சனம்
குதிரை பேரம் நடத்தி முதுகில் குத்திவிட்டதாக தவெகவை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளது குறித்து...
குதிரை பேரம் நடத்தி முதுகில் குத்திவிட்டதாக தமிழக வெற்றிக் கழகத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளதாவது:
''தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசு தன்னை காப்பாற்றிக்கொள்வதற்கு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது.
Advertisement
Advertisement
அதேநேரம், தூய சக்தி, துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் குத்தி உள்ளது.
பொதுவாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து டிசைன் டிசைனாக கற்பனை செய்திகள் வலம் வரும். அப்படித்தான், திமுக-வுக்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன.
இந்தச் செய்தி உண்மையா? என்று நேரில் கேட்டவர்களுக்கு தெளிவான விளக்கம் அளித்தோம். அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மக்களும், நம் கட்சியின் நிர்வாகிகளும் உறுதியாக நம்பினார்கள்.
ஆனால், தமிழக வெற்றிக் கழகம், நம் கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும், ஒருசில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரிக்க முற்பட்டது என்பது வேதனையான உண்மை. தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு பொய்க்கால் குதிரை அரசு அமைத்துவிட்டது.
நமக்கு வாக்களித்த மக்களையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் கொடுத்த கழகத்தையும் நம்புங்கள். எல்லா கட்சிகளிலும் பிரச்சனைகள் உள்ளன. அதேபோல், நமது கட்சியிலும் பிரச்சனை இருப்பின் அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம். ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சிலகாலம்தான்.
கழகத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் புகழ் இருக்கும் வரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செழித்து வளரும்'' என எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
TVK Stabbed AIADMK in the Back: Edappadi Palaniswami
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.