பெரியார் அறிவுலகம்: லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக புகார் மனு!
பெரியார் அறிவுலக விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக புகார் மனு ஒன்றை அளித்தது குறித்து...
பெரியார் அறிவுலக விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக புகார் மனு ஒன்றை சனிக்கிழமை (நவ. 7) அளித்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரியார் அறிவுலகம் கட்டும் பணிகள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நிலையில், கடந்த அக். 16 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யால் திறந்துவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பெரியார் அறிவுலகத்துக்குப் புத்தகங்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக கட்டுரை ஒன்றில் எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியிருந்தார்.
Advertisement
Advertisement
மேலும், 'அகல்விளக்கு' உள்ளிட்ட சில பதிப்பகங்களிடமிருந்து சுமார் 1,800-க்கும் மேற்பட்ட தரமற்ற, செய்யறிவு மூலம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் மற்றும் தவறான தகவல்களைக் கொண்ட நூல்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிகழ்வு அரசியல் கட்சித் தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு பிரபலங்கள் மற்றும் தலைவர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்வதோடு, முறையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த நிலையில் பெரியார் அறிவுலகத்தில்’ புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ.பரந்தாமன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்வரும் கேள்விகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
1. இந்த புத்தகங்களுக்கான கொள்முதல் / வாங்குதல் ஆர்டர்களை வழங்கிய அதிகாரிகள் யார்?
2. புத்தகங்கள் ஒவ்வொன்றாக மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வாங்கப்பட்டதா அல்லது மொத்தமாக வாங்கப்பட்டதா?
3. இந்த பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆர்டர்கள் எந்த தேதிகளில் வழங்கப்பட்டன?
4. கொள்முதலுக்கான குறிப்பு கோப்பை தொடங்கிய, கையெழுத்திட்ட மற்றும் ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார்?
5. இந்த கொள்முதலுக்கு தகுதிவாய்ந்த புத்தகத் தேர்வு / கொள்முதல் குழு ஒப்புதல் அளித்ததா, மேலும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா?
6. த்ரிஷா விஜய், சங்கீதா விஜய், தாமரை பன்னீர், தாமரை முரளி, மோனிகா ரவி ஆர். மற்றும் பிற பெயர்களைக் கொண்ட எழுத்தாளர்கள் உண்மையில் இருக்கிறார்களா?
7. புத்தகங்கள் எந்த தேதிகளில் விநியோகிக்கப்பட்டன, அவை பெறப்பட்டவுடன் அவற்றின் தரம் மற்றும் அளவு சரிபார்க்கப்பட்டதா?
8. ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் எந்த தேதிகளில், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது? போன்ற கேள்விகளை அந்த புகார் மனுவில் திமுக முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.