குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு வெளியீடு!
குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறித்து...
குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
சார் பதிவாளர், உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான குரூப் 2, 2-ஏ முதல்நிலைத் தோ்வு தமிழகம் முழுவதும் கடந்த நவ. 1 ஆம் தேதி நடைபெற்றது. அதில் 81 சதவீதம் பேர் பங்கேற்றதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி சார் பதிவாளர், உதவி ஆய்வாளர் உள்பட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 846 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் 1,647 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை எழுத மொத்தம் 4,89,885 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 3,97,290 (81.1 சதவீதம்) பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 92,595 பேர் பங்கேற்கவில்லை. சென்னையைப் பொருத்தவரை 173 மைங்களில் சுமார் 50,000 பேர் தோ்வெழுதினர்.
இதையடுத்து, குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு விடைக்குறிப்புக்காக தேர்வர்கள் காத்திருந்த நிலையில், உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வெழுதியவர்கள் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று விடைக் குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வுகளுக்கான முடிவுகள் இரு மாதங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.