வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடி உயர்வு: வீட்டுக்கான சிலிண்டர் விலை?
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 66.50 உயர்த்தப்பட்டுள்ளது தொடர்பாக...
சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 66.50 உயர்த்தப்பட்டுள்ளது; குறிப்பிட்ட நகரங்களில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 71.50 வரை அதிகரித்துள்ளது. அதேவேளையில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
மாதந்தோறும் 1 ஆம் தேதி வணிகப் பயன்பாடுக்கான சிலிண்டர், விமான எரிப்பொருள் ஆகியவற்றின் விலையை மாற்றியமைப்பது போல அக்டோபர் 1 ஆம் தேதியான வியாழக்கிழமை அவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துள்ளன.
பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது; இந்த விலை உயர்வு ஒவ்வொரு நகரத்திலும் மாறுபடுகிறது.
Advertisement
Advertisement
இதன்படி, தில்லியில், 19 கிலோ வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ. 62.50 அதிகரித்து ரூ. 2,810-ஆக உயர்ந்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தில் இதன் விலை ரூ. 2,747.50-ஆக இருந்தது. மும்பையில் ரூ. 63 அதிகரித்து ரூ. 2,701-ல் இருந்து ரூ. 2,764-ஆக உள்ளது. சென்னையில் ரூ.66.50 உயர்த்தப்பட்டு ரூ. 2,916.50-ல் இருந்து ரூ. 2,983-ஆகவும், கொல்கத்தாவில் ரூ. 2,884 ஆகவும் உயர்ந்துள்ளது. பாட்னாவில் ரூ. 71.50 அதிகரித்து ரூ. 3,029-லிருந்து ரூ. 3,100.50-ஆக உயர்ந்துள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களிலேயே இங்குதான் மிக அதிக விலை உயர்வாகும். லக்னௌவில் ரூ. 62.50 அதிகரித்து ரூ. 2,932.50-ஆக உயர்ந்துள்ளது.
நாட்டின் பிற பகுதிகளிலும் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. லே பகுதியில் ரூ. 3,385.50-லிருந்து ரூ. 3,450-ஆகவும், தவாங் பகுதியில் ரூ. 3,073.50-ஆகவும் உயர்ந்துள்ளது. அகமதாபாத்தில் ரூ. 2,831.50-ஆகவும், கன்னியாகுமரியில் ரூ. 3,046-ஆகவும் உள்ளது.
இந்த விலை உயர்வால் உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் இந்த எரிபொருளைச் சார்ந்திருக்கும் பிற வணிகங்களுக்கான செலவு அதிகரித்துள்ளது.
சிலிண்டர் விலை உயர்வால் ஏற்கனவே பல உணவகங்கள், தொழிலகங்கள் மூடப்பட்டன. தேநீர், காபி போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் மீண்டும் விலை உயர்த்தப்பட்டிருப்பது வணிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை
அதேநேரத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
குறிப்பிடப்பட்ட நகரங்களில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. தில்லியில் ரூ. 942, மும்பையில் ரூ. 941.50 மற்றும் சென்னையில் ரூ. 957.50 என்ற விலையிலேயே வீட்டு உபயோக சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. லக்னௌவில் இதன் விலை ரூ. 979.50 ஆகவும், பாட்னாவில் ரூ. 1,031.50 ஆகவும் உள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையானது சர்வதேச அளவிலான சிலிண்டர் விலை நிலவரங்கள் மற்றும் நாணய மாற்று விகித மாற்றங்களால் தீர்மானிக்கப்படுகிறது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு, நாட்டில் பெட்ரோலியம் மற்றும் சிலிண்டர் விலைகள் குறித்த தரவுகளைப் பராமரித்து வருகிறது.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையில் பதட்டமான நிலை நீடித்து வருகிறது. இந்த ஹோர்முஸ் நீரிணை வழியிலான கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை காரணமாகப் பயன்படுத்திக் கொண்டு சமையல் எரிவாயு விலை இந்தியாவில் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
The price of 19-kg commercial LPG cylinders has increased from October 1, with the hike varying across cities.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.