மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
மதுராந்தகம், தாராபுரத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருவதைப் பற்றி...
மதுராந்தகம், தாராபுரம் (தனித்) தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (அக். 6) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் வெற்றி பெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்), சந்தியபாமா (தாராபுரம்) இவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இதனால், இவ்விரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தனித்தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணையை கடந்த செப். 7-ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வேட்புமனு தாக்கல் செப். 9-ல் தொடங்கி 16-ஆம் தேதி முடிவடைந்தது.
Advertisement
Advertisement
இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சி தமிழக வெற்றிக் கழகம், எதிர்க்கட்சி திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடது சாரிகள் என்று ஐந்து முனைப் போட்டி உருவானது.
இந்தத் இடைத்தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பேரவைத் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் இ.பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பி.சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மொத்த வாக்காளர்கள் 2,13,788. இதில் ஆண்கள் 1,04,926, பெண்கள் 1,08,797, மூன்றாம் பாலினத்தவர் 65 பேர். வாக்குப் பதிவுக்காக 285 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று, தாராபுரம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் பி.சத்தியபாமா, திமுக சார்பில் செள.சுகன்யா, அதிமுக சார்பில் கே.பானுமதி, நாதக சார்பில் மு.கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ப. லட்சுமணன் ஆகிய பிரதான கட்சி வேட்பாளர்கள் உள்பட 22 பேர் களத்தில் உள்ளனர்.
இங்கு 1,07,285 ஆண் வாக்காளர்கள், 1,16,013 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவா் 8 பேர் உள்பட மொத்தம் 2,23,306 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்குப்பதிவை முன்னிட்டு மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் இன்று (அக். 6) பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வருகிற அக். 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Polling for the by-elections in Maduranthakam and Dharapuram began on Tuesday (Oct. 6) morning and is currently underway.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.