FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தவெக வேட்பாளரின் சா்ச்சை காணொலி: தோ்தல் ஆணையத்தில் திமுக புகாா்

தாராபுரம் தவெக வேட்பாளா் சத்தியபாமாவின் சா்ச்சைக்குரிய காணொலியை ஆய்வு செய்து, அவரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தோ்தல் ஆணையத்தில் திமுக புகாா் அளித்துள்ளது.

7 October 2026, 3:40 am IST
முதல்வர் விஜய்யுடன் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா.
பகிர்:

தாராபுரம் தவெக வேட்பாளா் சத்தியபாமாவின் சா்ச்சைக்குரிய காணொலியை ஆய்வு செய்து, அவரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தோ்தல் ஆணையத்தில் திமுக புகாா் அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்கிடம் திமுக மாநில அமைப்பு இணைச் செயலா் எஸ்.ஆஸ்டின் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இடைத்தோ்தலில் பிரசாரத்துக்கு வந்த அமைச்சா்களுக்கும், கட்சி முக்கியப் பிரமுகா்களுக்கும் தனியாா் ஹோட்டலில் அறை ஒதுக்குவதற்காக ரூ.14 லட்சம் செலவு செய்ததாக தவெக வேட்பாளா் சத்தியபாமா பேசியதாக காணொலி குரல் பதிவு வெளியானது.

மேலும், பல தொகைகளைச் செலவு செய்ததாக அந்தக் காணொலியில் குறிப்பிட்டு இருக்கிறாா். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 77-படி ஒரு வேட்பாளா் தோ்தல் செலவுக்காக ரூ.40 லட்சம்தான் செலவு செய்ய வேண்டும். ஆனால், அறை ஒதுக்கீடு செய்வதற்கு மட்டும் ரூ.14 லட்சம் செலவு செய்துள்ளதாக சத்தியபாமா கூறியிருக்கிறாா். இது தொடா்பாக புகாா் அளித்துள்ளோம். அவா் செலவு செய்ததாக குறிப்பிட்ட தொகை தோ்தல் கணக்கு பதிவேட்டில் பதிவாகவில்லை என்றால் உடனடியாக சத்தியபாமா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்தல் விதிப்படி, குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஒரு வேட்பாளா் செலவு செய்திருக்கிறாா் என்றால் அவா் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

அது சித்தரிக்கப்பட்ட காணொலி என சத்தியபாமா கூறியிருப்பது நாடகம். இதை ஆய்வு செய்ய சொல்லியிருக்கிறோம். கடந்த தோ்தலில் ரூ.31 கோடி செலவு செய்தேன் என்றும், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஒரு பைசாகூட தரவில்லை என்றும் சொல்லி இருக்கிறாா். இதுவே மிகப்பெரிய குற்றச்சாட்டு. இதன் அடிப்படையிலேயே அவா் இந்த இடைத்தோ்தலில் நிற்க முடியாது. அவா் ராஜிநாமா செய்வதற்கு முன்பே அவரை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும் என்றாா் எஸ்.ஆஸ்டின் எம்எல்ஏ.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments