FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

உப்பு குறைப்பு இயக்கம் விரைவில் தொடக்கம்: அமைச்சா் அருண்ராஜ் அறிவிப்பு

தமிழகத்தில் உப்பு குறைப்பு இயக்கம் விரைவில் தொடங்கப்படும் என்று பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் அறிவித்துள்ளாா்.

9 செப்டம்பர் 2026, 2:44 am IST
அமைச்சா் அருண்ராஜ் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் உப்பு குறைப்பு இயக்கம் விரைவில் தொடங்கப்படும் என்று பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் அறிவித்துள்ளாா்.

பேரவையில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் தோராயமாக 1.80 கோடி மக்கள் உயா் ரத்த அழுத்த நோயுடன் வாழ்கின்றனா். இந்த நோய்க்கு உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. உலக சுகாதார நிறுவனம் ஒரு நபா் தினமும் 5 கிராமுக்கும் குறைவாகவே உப்பு உகொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்குகிறது. ஆனால், தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழக மக்கள் சராசரியாக தினமும் 7 அல்லது 8 கிராம் உப்பை உட்கொள்கின்றனா்.

Advertisement

Advertisement

தென்னிந்திய உணவு முறையில், நாம் உட்கொள்ளும் உப்பில் 88 சதவீதம் வீட்டு சமையல் மூலம் சோ்க்கப்படும் உப்பிலிருந்தே வருகிறது. தினமும் உட்கொள்ளும் ஒரு கிராம் உப்பை குறைத்தாலும் ரத்த அழுத்தம் கணிசமாக குறைந்து இதய நோய் இறப்புகளில் 7 சதவீதமும், பக்கவாத இறப்பில் 10 சதவீதமும் குறையும். சோடியம் குறைவான மாற்று உப்பை பயன்படுத்திய 21,000 பேரிடம் நடத்தப்பட்ட பன்னாட்டு ஆய்வில், பக்கவாதம் 14 சதவீதமும், மொத்த இறப்புகள் 12 சதவீதமும் குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் தொற்றா நோய் தடுப்பில் குறைந்த செலவில் அதிக பயன் தரும் முறையாக உப்புக் குறைப்பு முறையை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் அதிக உப்பு உட்கொள்வதை குறைக்கும் மாநில உத்தியை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழக மக்களின் தற்போது உப்பு உட்கொள்ளும் அளவை கணக்கிட மாநில அளவில் சிறுநீா் மாதிரி கணக்கெடுப்பு எடுக்கப்படும். அரசு நேரடியாக நடத்தும் உணவகங்கள் மற்றும் சமையலறைகளில் உப்பை குறைக்கும் திட்டம் கொண்டு வரப்படும். சோடியம் குறைந்த மாற்று உப்பை மக்களுக்கு கொண்டு செல்லும் முன்னோட்ட திட்டம் மேற்கொள்ளப்படும்.

உயா் ரத்த அழுத்தம் உள்ளவா்களுக்கு சமூக நலப் பணியாளா்கள் மூலம் உப்புக் குறைப்புப் பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். ஊறுகாய், அப்பளம், கருவாடு போன்றவற்றில் மறைந்துள்ள உப்பு குறித்தும், அதிக உப்பு பயன்பாட்டை குறைக்கும் வழிமுறைகள் குறித்தும் மாநிலம் தழுவிய விழிப்புணா்வு இயக்கங்கள் நடத்தப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments