FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திமுக வந்தால் இணைத்துக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு இபிஎஸ் சொன்ன பதில்!

திமுக வந்தால் இணைத்துக் கொள்வீர்களா? என எடப்பாடி பழனிசாமியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் சிரித்தபடி அளித்த பதில்

8 செப்டம்பர் 2026, 4:38 pm IST
எடப்பாடி பழனிசாமி - dps
பகிர்:

புதிய கட்சிகள் எங்களுடன் வந்தால் இணைத்துக் கொள்வோம் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதற்கு, திமுக வந்தால் இணைத்துக் கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டன்ர், திமுக வருமா? என சிரித்தபடி பதிலளித்தார் இபிஎஸ்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புதிய அரசு அமைக்கப்பட்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது. ஆனால், சட்டப்பேரவை தொடங்கிய நாள் முதல் தினமும் ஏதாவது ஒரு பிரச்னை அவையில் ஏற்பட்டு வருகிறது.

நிதிநிலை அறிக்கை விவாதத்தின்போதும் பிரச்னைகள் ஏற்படுகின்றன. மானியக் கோரிக்கையின்போதும் சட்டப்பேரவையில் பிரச்னைகள் ஏற்படுவதால், மக்களின் பிரச்னைகளை முழுமையாகப் பேச முடியாத நிலை உள்ளது.

Advertisement

Advertisement

சட்டப்பேரவை தொடங்கியதும் கேள்வி நேரம் நடைபெறுகிறது. கேள்வி நேரத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேசுகின்றன. அப்போது ஆளுங்கட்சி தரப்பில் இருந்து அமைச்சர்களோ, பேரவை உறுப்பினர்களோ ஏதேனும் ஒரு பிரச்சினையை அல்லது குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் மீது முன்வைக்கின்றனர். அதற்கு எதிர்க்கட்சிகள் பதில் அளிக்கின்றன. இப்படியே மாறி மாறி பேசுவதால் பல மணி நேரம் வீணாகிறது.

ஒரு நாளைக்கு 10 மணி நேரம் சட்டப்பேரவை நடைபெறுவதாக பெருமையாகக் கூறுகிறார்கள். ஆனால், அதில் மூன்று மணி நேரம் மட்டுமே மக்களின் பிரச்னைகள் குறித்து பேசப்படுகிறது. மீதமுள்ள நேரம் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி பேசுவதிலேயே வீணாகிறது.

எதிர்க்கட்சிகள் கருத்துகளை தெரிவித்தாலும், அமைச்சர்களிடமிருந்து உரிய பதில் கிடைப்பதில்லை. ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே துறை ரீதியாக பதில் அளிக்கின்றனர். பல கேள்விகளுக்கு பெரும்பாலும் மூன்று அமைச்சர்கள் மட்டுமே பதில் அளிக்கின்றனர். மற்ற அமைச்சர்கள் பதில் கூறுவதே இல்லை.

அந்தந்த துறை சார்ந்த கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்தால்தான் அதற்கான தீர்வு கிடைக்கும். ஆனால், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளிக்கும் நிலை இல்லை.

நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், அதற்கும் பதில் கிடைக்கவில்லை. முதலமைச்சரின் பதிலுரையில் மேலோட்டமாக மட்டுமே பேசுகிறார்.

பிரதான எதிர்க்கட்சிகளும், எங்களைப் போன்ற எதிர்க்கட்சிகளும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் காவல்துறை மானியக் கோரிக்கையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால், அவற்றில் எந்தக் கோரிக்கைக்கும் உரிய பதில் இடம்பெறவில்லை.

குறிப்பாக ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடைபெற்றுள்ளன. மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் இதுபோன்ற மோசடிகள் அதிகமாக நடந்துள்ளன. சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு மக்களின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காவல்துறை மானியக் கோரிக்கையின்போது இதுகுறித்து குறிப்பிட்டு பேசினேன். ஆனால், இதுதொடர்பாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

இந்த மோசடிகளில் ஏமாற்றப்பட்டவர்கள் பெரும்பாலும் ஏழை, எளிய மக்கள். நீண்ட நாட்களாக பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம். இதுகுறித்தும் பதிலுரை இடம்பெறவில்லை. காவல்துறையினரின் சம்பள உயர்வு குறித்தும் கேட்டோம். இதற்கும் பதில் அளிக்கப்படவில்லை.

தீபாவளி, தை போன்ற காலகட்டங்களில் அன்றாடம் உழைத்து சம்பாதித்த பணத்தை ஏழை, எளிய மக்கள் சேமிக்கின்றனர். அந்தப் பகுதிகளில் உள்ள சில நிறுவனங்கள் கவர்ச்சிகரமான முறையில் சீட்டு நடத்தி பொதுமக்களின் பணத்தை மோசடி செய்கின்றன. இதுகுறித்தும் காவல்துறை மானியக் கோரிக்கையில் பேசினேன். ஆனால், இதற்கும் பதில் அளிக்கவில்லை.

என்றோ நடந்த ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருப்பதால் பொன்னான அவை நேரம் வீணடிக்கப்படுகிறது. நீங்கள் பேச வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், எங்களது கேள்விகளுக்கு முதலில் பதில் கூறிவிட்டு நீங்கள் பேசினால் நன்றாக இருக்கும். நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு எதற்குமே பதில் இல்லை.

தவெக ஆட்சியில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் சீண்டல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

காவல்துறை மானியக் கோரிக்கையை முதலமைச்சர் சமர்ப்பிக்கவில்லை. வேறொரு அமைச்சர்தான் சமர்ப்பித்தார். தற்போது முக்கியமான துறைகளில் காவல்துறையும், நகராட்சி நிர்வாகத் துறையும் அடங்கும். மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக்கூடிய அமைப்பாக நகராட்சி நிர்வாகம் உள்ளது. அதைக்கூட இந்த அரசு சரியாக செயல்படுத்தவில்லை.

முதலமைச்சர் தனது துறையை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும்.

தவெக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை நேரடிக் கொள்முதல் நிலையங்களில் உரிய முறையில் கொள்முதல் செய்யவில்லை. இதனால் அண்மையில் பெய்த மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் திறந்தவெளியில் குவித்து வைக்கப்பட்டிருந்ததால், மழையில் நனைந்து முளைத்து பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. விவசாயிகளை காக்கும் அரசாக இந்த அரசை பார்க்க முடியவில்லை. உழைப்பாளிகளின் நெல்மணியைக்கூட இந்த அரசு கொள்முதல் செய்யவில்லை.

கடன் வாங்கித்தான் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்ற நிலைக்கு இந்த அரசு வந்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்கிக் கொண்டே சென்றால், இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் நிலைக்கப் போவதில்லை. ஏற்கனவே அதிக அளவில் கடன் இருக்கும் நிலையில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளனர். வருவாயைப் பெருக்கி, அதிலிருந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

மின்கட்டண உயர்வு தொடர்பாக மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர்.

மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 45 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என கூறியுள்ளனர். ஆனால், சம்பா பயிருக்கு குறைந்தபட்சம் 120 நாட்கள் தண்ணீர் இருந்தால்தான் முழுமையான விளைச்சலைப் பெற முடியும். 40 அல்லது 45 நாட்கள் மட்டும் தண்ணீர் திறந்துவிடுவது போதாது. முழுமையான பாசனத்திற்குத் தேவையான தண்ணீரை வழங்க வேண்டும்.

ஏற்கனவே அதிமுக வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளிலும் குதிரை பேரம் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட ஒரு நாடகம்தான் இது. அந்த இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்; அவர்கள் வெற்றி பெறுவார்கள். அது நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகள்.

நிதிநிலை அறிக்கை முதல் தற்போது நடைபெற்று வரும் மானியக் கோரிக்கைகள் வரை சட்டப்பேரவை நிகழ்வுகளை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது ஒரு பிரச்சினையை ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி பேசுவதால் அவையின் நேரம் வீணடிக்கப்படுகிறது.

மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்கு சில மணி நேரங்கள் மட்டுமே கிடைக்கின்றன. எனவே, பொன்னான அவை நேரத்தை வீணடிக்கக் கூடாது. ஆளுங்கட்சிக்கு போதிய பலம் இல்லை.

புதிய கட்சிகள் எங்களுடன் வந்தால் இணைத்துக் கொள்வோம். திமுக வந்தால் இணைத்துக் கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, திமுக வருமா? என சிரித்தபடி பதிலளித்தார்.

எந்தத் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், எந்த இடத்தில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், அதற்கு எப்படி தீர்வு காண வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். ஆனால், இந்த அரசு முழுவதும் ரீல்ஸ் இயக்கமாகவே இருந்து வருகிறது என்றார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments