FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தரிகெட்டு ஓடுகிற தவெக காளை இடைத்தேர்தலில் அடக்கப்படும்! சொல்லியிருப்பது யார்?

தரிகெட்டு ஓடுகிற தவெக காளை இடைத்தேர்தலில் அடக்கப்படும் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்‌.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

10 செப்டம்பர் 2026, 11:43 am IST
தவெக கூட்டம் - DPS
பகிர்:

சென்னையில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற தொழில்துறை மாநாட்டில் பத்திரிக்கையாளர்கள் அனுமதி இல்லாமல் வெளிப்படை தன்மையின்றி நடைபெற்றுள்ளது. ஆனால் தற்போது முதல்வர் விஜய்யின் லண்டன் முதலீட்டாளர்கள் சந்திப்பு கை கொடுக்குமா? காலைவாரிவிடுமா? என்கிற கவலை மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதிமுகவின் எக்கு கோட்டையாக இருக்கிற 2 தொகுதிகளிலும் இரட்டை இலை மலரும் என்கிற செய்தி மூலம் தரிகெட்டு ஓடுகிற தவெக காளையை மூக்கணாங்கயிராக மக்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நியாயமான தீர்ப்பை அளிப்பார்கள் என்று தான் நம்புவதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்‌.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களை மட்டுமே பிடித்தது; நாம் அறிந்த ஒன்றுதான். தேர்தல் முடிவில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் வென்ற கட்சிகளிடம் அமைச்சர் பதவி தருவதாக கூறியது, அதேபோல் அதிமுகவில் வென்றவர்களிடமும் அமைச்சர் பதவி ஆஃபர் கொடுத்து, தன்னுடைய ஆட்சிக்கு பெரும்பான்மையை உறுதிப்படுத்திக் கொண்டார் முதல்வர் விஜய்.

Advertisement

Advertisement

இப்போது இரண்டு இடைத்தேர்தல்கள் ஏன் தமிழகத்திலே அறிவிக்கப்பட்டிருக்கிறது? பொதுவாக இடைத்தேர்தல்கள் இதற்கு முன்பு ஏன் அறிவிக்கப்பட்டது? இப்போது இந்த இடைத்தேர்தல் வருவதற்கான சூழ்நிலை என்ன? காரணம் என்ன? தமிழ்நாட்டு மக்கள் மீது இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்டிருக்கிறதா ?அல்லது இயற்கையாக இந்த தேர்தல் நடைபெறுகிறதா?

மக்கள் சிந்திக்க வேண்டிய இந்த நேரத்தில் தவெக ஆட்சி 100 நாள்களைக் கடந்தும் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் எதையும் நிறைவேற்ற முயற்சிக்கவே இல்லை என்ற குற்றச்சாட்டுதான் இப்போது மக்களிடத்தில் இன்றைக்கு எழுந்திருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

தவெக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இந்த 100 நாள்களில் தவெக கட்சி நிர்வாகிகளின் அராஜகங்கள், அட்ராசிட்டிகள், நாளுக்கு நாள் பெருகி வருவதை நாம் ஊடகங்கள் வாயிலாக, பத்திரிக்கை வாயிலாக, சமூக வலைதளங்கள் வாயிலாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள், ரவுடிசம், மாமூல் பிரச்னைகள், விலைவாசி உயர்வு, தமிழக மக்கள் தினந்தோறும் திணறித் திண்டாடி வருவதை இன்றைக்கு மக்கள் மிகப்பெரிய அளவில் கடும் கோபத்தில் இந்த அரசின் மீது தங்களுடைய தீர்ப்பை எழுதுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிற மகளிர் உரிமைத்தொகை வாக்குறுதி, மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிற பயிர் கடன் தள்ளுபடி செய்யாதது போன்ற தவெக ஆட்சியின் இந்த 100 நாள்கள் அதிருப்திகளுக்கு தீர்வு காண அக்கறை செலுத்தாமல் முயற்சி எடுக்காமல், அலட்சிய போக்குடன் வளம் வருகின்ற முதல்வர் விஜய் , இன்றைக்கு ஒரு வாரம் பயணமாக லண்டன் புறப்பட்டுச் செல்கிறார்.

அண்மையில் சென்னையில் நடந்த தொழில்துறை மாநாட்டில், இதுவரை தமிழக அரசியல் வரலாறு காணாத வகையிலே, பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படாமல், வெளிப்படைத் தன்மையில்லாமல் தவெக ஆட்சியில் ஒரு ரகசிய முதலீட்டாளர்கள் ஒப்பந்த மாநாடு நடந்து முடிந்தது. எல்லா வகையிலும் விமர்சனத்திற்கு உள்ளானது.

தற்போது லண்டன் முதலீட்டாளர்கள் சந்திப்பும் ஒரு வெளிப்படைத் தன்மையும், அறிவிப்பும் இல்லாமல், இன்றைக்கு லண்டன் புறப்பட்டுச் செல்கிற முதல்வர் விஜய் அவர்களின் இந்த அமைதி புரட்சியின் மூலமாக தொழில் புரட்சியை முதல்வர் விஜய் நிகழ்த்திக் காட்டுவாரா, அல்லது தன்னுடைய தடாலடி அணுகுமுறையால் லண்டன் முதலீட்டாளர்கள் சந்திப்பை ரீல்ஸ் புரட்சியிலே மட்டும் நிகழ்த்திக் காட்டுவாரா?

விஜய்யின் நிர்வாக அனுபவமும் அறிவுசார்ந்த அணுகுமுறையும் முதல்வர் விஜய் அவர்களுக்கு இந்த லண்டன் முதலீட்டாளர்கள் சந்திப்பு கை கொடுக்குமா? காலைவாரிவிடுமா? என்கிற கவலை தமிழ்நாடு மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

எது எப்படியோ, காலம் நமக்கு தருகின்ற பாடம் மிகவும் வலிமையானதாக இருக்கும் என்பதை மட்டும் லண்டன் புறப்பட்டுச் செல்கிற விஜய் அவர்களுக்கு இடைத்தேர்தல் பாடம், காலம் தருகிற தீர்ப்பாக அமையும் .

எடப்பாடியாரின் தலைமையிலே உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எக்கு கோட்டையாக இருக்கிற இரண்டு தொகுதிகளிலும் இரட்டை இலை மலரும், என்கிற செய்திதான் தரிகெட்டு ஓடுகிற இந்த தவெக காளையை இடைத்தேர்தலில் இரட்டை இலை வெற்றி என்ற மூக்கணாங்கயிறாக தமிழ்நாட்டு மக்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நியாயமான தீர்ப்பை அளிப்பார்கள் என கூறினார்.

summary

The runaway TVK bull will be tamed in the by-election Who said this

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments