தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டது பற்றி...
தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவர் என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மதுரை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கோபிசன், மருத்துவமனை டீன் அருண் சுந்தரேஷ் குமார், மருத்துவர்கள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அமைச்சரின் ஆய்வின்போது கட்சி நிர்வாகிகள் அதிகளவில் மருத்துவமனைக்குள் வந்ததால் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனை கவனித்த அமைச்சர், தன்னுடன் வந்த கட்சி நிர்வாகிகள் யாரும் உள்ளே வர வேண்டாம் என தனியார் பாதுகாவலர்கள் மூலம் அறிவுறுத்தி, அவர்களை தடுத்து நிறுத்தினார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து பிரசவ வார்டு பகுதிக்கு சென்ற அமைச்சர் அருண்ராஜ், அங்கிருந்த பச்சிளம் குழந்தைகளை தூக்கிக் கொஞ்சி மகிழ்ந்தார். குழந்தைகளின் தாய்மார்களிடம் விரைவில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வழங்கப்பட உள்ளதாக கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
மதுரைக்கு தமிழக பட்ஜெட்டில் அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரையில் மாநில அளவிலான புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரூ.84 கோடி மதிப்பில் மாநில அளவிலான மருத்துவ சிகிச்சை மையம் ராமநாதபுரம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைய உள்ளது. இதற்காக கூடுதல் இடம் தேவைப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் பேசி சட்டரீதியான நிர்வாக நடைமுறைகள் முடிக்கப்பட்டு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் ரூ.44 கோடி மதிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட உள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ரூ.7.5 கோடி மதிப்பில் புதிய மருத்துவ உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு ரூ.856 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் திட்டங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதாக பல்வேறு இடங்களில் கூறப்பட்டு வரும் நிலையில், விரைவில் 4,500 செவிலியர்கள் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட உள்ளனர். இதன் மூலம் செவிலியர் பற்றாக்குறை விரைவில் சரி செய்யப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
கடந்த 12 ஆண்டுகளாக புதிய செவிலியர் கல்லூரி அறிவிக்கப்படாத நிலையில், தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய செவிலியர் கல்லூரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மதுரையும் இடம்பெற்றுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 1940ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவு தற்போது செயல்பட்டு வருகிறது. இதற்கு பதிலாக அதிநவீன புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கான திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும்.
இதனிடையே, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் காரணமாக தாமதமாகியுள்ளது. முதல்வர் வெளிநாட்டுப் பயணத்தை முடித்து திரும்பியதும், திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை வசதிகளை மேம்படுத்துதல், புதிய மருத்துவ உபகரணங்கள் கொள்முதல், செவிலியர் பற்றாக்குறையை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
4,500 nurses will be appointed soon across Tamil Nadu, said Health and Family Welfare Minister Arunraj.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.