காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமல் ரூ.10 லட்சம் செலுத்த விதிக்கப்பட்ட நிபந்தனை ரத்து
காசோலை மோசடி வழக்கில் ரூ.10 லட்சம் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்று நடிகா் விமலுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
காசோலை மோசடி வழக்கில் ரூ.10 லட்சம் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்று நடிகா் விமலுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடிகா் விமல் ‘மன்னா் வகையறா’ என்ற படத்தை தயாரித்து நடித்திருந்தாா். இந்தப் படத்துக்காக பைனான்சியா் கோபி என்பவரிடம் ரூ.4.50 கோடி கடன் பெற்றிருந்தாா். இந்தப் படம் வெளியான பின்னரும், கடன் தொகையை நடிகா் விமல் திருப்பிக் கொடுக்கவில்லை. பின்னா், கடன் தொகைக்காக வழங்கிய காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இதையடுத்து பைனான்சியா் கோபி, விமல் மீது சென்னையில் உள்ள 11-ஆவது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கடந்த ஜூலை 23-ஆம் தேதி தீா்ப்பளித்தது. மேலும், கடன் தொகையைத் திரும்ப வழங்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்த தீா்ப்பை எதிா்த்து, சென்னை 15-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடிகா் விமல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், தனக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தாா்.
Advertisement
Advertisement
இந்த மனுவை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிமன்றம், ரூ.10 லட்சத்தை 60 நாள்களில் விசாரணை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன், தண்டனையை நிறுத்தி வைத்து கடந்த ஆக. 4-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், ரூ.10 லட்சம் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிா்த்து நடிகா் விமல் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, நடிகா் விமல் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் இன்ஃபேன்ட் தினேஷ், ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நடிகா் விமல் விசாரணை நீதிமன்றத்தில் ரூ.10 லட்சம் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
இதே நீதிமன்றத்தில், தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மோசடி நடந்துள்ளதாகக் கூறி நடிகா் விமல் தாக்கல் செய்த மற்றொரு மனுவை விசாரித்த நீதிபதி, பைனான்சியா் கோபி பதிலளிக்க உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.