FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மகாகவி பாரதியின் நினைவு நாளில் மறைந்த சாலமன் பாப்பையா! பட்டிமன்ற பேச்சாளர் ராஜா

மகாகவி பாரதியாரின் நினைவு நாளில் (செப்.11) மூத்த தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மறைந்துள்ளார் என்று பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா கூறினார்.

12 செப்டம்பர் 2026, 8:13 am IST
சாலமன் பாப்பையா - Photo: CMOTamilnadu
பகிர்:

மகாகவி பாரதியாரின் நினைவு நாளில் (செப்.11) மூத்த தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மறைந்துள்ளார் என்று பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா கூறினார்.

மூத்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு குறித்து அவருடன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்பில் இருந்த பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா கூறியது:-

1961-ஆம் ஆண்டு முதல் சுமார் 65 ஆண்டுகள் அவர் மேடையில் தனது உரைகளை நிகழ்த்தி இருக்கிறார். ஆரம்பத்தில் அதிரடியான பேச்சாளராக இருந்தார்; 1973-க்குப் பிறகு நகைச்சுவையாகப் பேசத் தொடங்கினார். 'வைகை வளவன்' என்ற புனைபெயரில் ஆரம்ப காலத்தில் மேடையில பேசிய அவர், பிற்காலத்தில் "சாலமன் பாப்பையா' எனப் பெற்றோர் வைத்த பெயருடன் பேசத் தொடங்கினார்.

Advertisement

Advertisement

மகாகவி குறித்து நூல்...: எட்டயபுரம் பாரதி விழாவை மிகவும் பெருமையுடன் நடத்திய அவர், மகாகவி பாரதியார் மீது மிகுந்த பற்று கொண்டவர்; அதனாலதான் பாரதி நினைவு நாளில் (செப்.11) மறைந்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. அவர் மகாகவி பாரதியார் குறித்து நிறைவாக ஒரு புத்தகம் எழுதிக்கொண்டு இருந்தார்; அது முற்றுப் பெறாமலே அவர் மறைந்திருக்கிறார்.

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று...: 1993-க்குப் பிறகு தனியார் தொலைக்காட்சியில் கடந்த 33 ஆண்டுகளாக நிரந்தரமாக இருந்தார். தனியார் தொலைக்காட்சியில் அவர் பேசிய முதல் பட்டிமன்றத்தில் இருந்து இன்று வரை நான் அவருடன் இருந்துள்ளேன்.

வரும் திங்கள்கிழமை (விநாயகர் சதுர்த்தி தினம்-செப்.14) தொலைக்காட்சி பட்டிமன்ற நிகழ்ச்சியைக்கூட பதிவு செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

கி.வா.ஜ. உள்ளிட்ட தமிழ் ஆளுமைகளுடன்...: 'கலை இலக்கியப் பெருமன்றம்' என்ற கம்யூனிஸம் சார்ந்த அமைப்புகளின்மூலம் சாலமன் பாப்பையா பேச்சாளராக அறிமுகமானார். தோழர் ஜீவா, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., கவிஞர் கண்ணதாசன், வாகீச கலாநிதி கி.வா.ஜ. உள்ளிட்ட மாபெரும் தமிழ் ஆளுமைகளுடன் மேடைகளில் பேசியிருக்கிறார்.

தோழர் ஜீவாவுக்குப் பிடித்த பேச்சாளராக சாலமன் பாப்பையா இருந்தார்.

தொடக்க காலத்தில் கல்லூரி நாள்களில் நாடக நடிகராகவும், மிகச் சிறந்த ஓவியராகவும் பரிமளித்தார்; கவிதைகளும் எழுதுவார்; குன்றக்குடி அடிகளாருடன் பல மேடைகளில் பேசி இருக்கிறார். 1973-க்குப் பிறகு நடுவராக மேடைகளில் ஆளுமை செய்யத் தொடங்கிய அவர், குடும்பத் தலைப்புகளை பட்டிமன்றங்களில் கொண்டு வந்தார். 1988-இல் முதன்முறையாக தூர்தர்ஷன் நிகழ்ச்சியில அவர் நடுவரானார்.

இலக்கியத்துக்கும்...: பட்டிமன்றப் பேச்சு மட்டுமல்லாமல், இலக்கியத்துக்கு ஏராளமான பங்களிப்புகளைத் தந்திருக்கிறார். திருக்குறள் உரை, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு பார்வை, உரை மலர்கள் உள்ளிட்ட ஏராளமான நூல்கள் எழுதியிருக்கிறார்.

அது தவிர, அகநானூறு, புறநானூறு, மதுரைக் காஞ்சி உள்ளிட்ட நூல்களுக்குத் தெளிவான உரை எழுதியிருக்கிறார். இவையெல்லாம் அவருடைய இலக்கியப் பங்களிப்புக்குச் சான்றுகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments