ஆர்ப்பாட்ட மேடையில் திமுகவினரின் பேச்சு முகம் சுழிக்க வைக்கிறது: திருமாவளவன்
திமுக குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசியது குறித்து...
ஆர்ப்பாட்ட மேடையில் திமுகவினரின் பேச்சு முகம் சுழிக்கும் அளவுக்கு இருக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி சென்றார்.
அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டி:
Advertisement
Advertisement
ஆ. ராசா மீதும் சேகர்பாபு மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் விமர்சிப்பதை தாண்டி, தனிநபர் மீது ஒருமையில் விமர்சிப்பது என்பது மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் நீண்ட நெடிய பாரம்பரிய உள்ள பேரியக்கம். அண்ணாவையும், கலைஞரையும் விமர்சித்தபோது நாகரிக வரம்பு மீறாமல் எதிர்கொண்டனர்.
முன்னாள் முதல்வரோடு தொடர்ந்து 15 ஆண்டுகள் தொடர்ந்து பயணித்திருக்கிறோம், நாகரிக வரம்புகளை மீறி பேசியதாக எதுவும் இல்லை. தற்போது ஆர்ப்பாட்ட மேடையில் அவர்கள் பேசிய பேச்சு பொதுமக்களை முகம் சுழிக்கும் அளவுக்கு அமைந்துள்ளது என்பது வருத்தம் அளிக்கிறது.
விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு தள்ளுபடி செய்திருப்பது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. இருப்பினும், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வது தொடர்பான அரசின் தற்போதைய நிலைப்பாட்டில் விவசாயிகள் இன்னும் முழுமையான திருப்தி அடையவில்லை.
இக்கோரிக்கையை நான், முதல்வர் கவனத்திற்கு நேரிடையாக எடுத்துச் சென்றுள்ளேன். இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.
நாடு முழுவதும் காலம் காலமாக அம்பேத்கர் சிலைகள் அவமதிக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
விசிக மற்றும் திமுக இடையேயான கூட்டணி குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "நாம் திமுகவுக்கு ஆதரவாகப் பேசுகிறோம் என்று கூறி, சிலர் துரோகப் பட்டியலை வாசிக்கிறார்கள்.
நாங்கள் ஏதோ பதவிக்காகக் கூட்டணியில் நீடிக்கிறோம் அல்லது வெளியேறுகிறோம் என்று சித்திரிப்பது தவறான தோற்றம், இது சரியானது அல்ல. விசிக தலைமைத்துவத்தின் மீது திட்டமிட்டு நடத்தப்படுகிற தாக்குதலாகவே இதைப் பார்க்கிறேன்” என்றார்.
ஸ்டாலின் உடல்நிலைக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், ”உங்கள் மூலம்தான் தெரிய வருகிறது, விரைந்து குணமடைய வேண்டும். என்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பிய பின்பு மருத்துவமனையில் நேரில் சென்று சந்திப்பேன்” என்றார்.
VCK leader Thirumavalavan has stated that the speeches made by DMK members on the protest stage are such that they make one cringe.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.