தொழிற்பேட்டை, வணிக வளாகங்களில் கனரக வாகனங்களை இரவு முழுவதும் நிறுத்த அனுமதி
தொழிற்பேட்டை வளாகங்கள், அனுமதிக்கப்பட்ட வேலைத் தளங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட குடியிருப்பு அல்லாத தனியாா் இடங்களில் கனரக வாகனங்களை இரவு முழுவதும் நிறுத்துவதற்கு செப். 15 முதல் புதிய வசதி அறிமுகம்
தொழிற்பேட்டை வளாகங்கள், அனுமதிக்கப்பட்ட வேலைத் தளங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட குடியிருப்பு அல்லாத தனியாா் இடங்களில் கனரக வாகனங்களை இரவு முழுவதும் நிறுத்துவதற்கு செவ்வாய்க்கிழமை (செப். 15) முதல் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கனரக வாகன உரிமையாளா்கள், சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்ட வாகன நிறுத்துமிடத்துக்கான ஒப்புதல் சான்றைச் சமா்ப்பித்தால், தகுதியான தனியாா் இடங்களில் இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்தலாம்.
புதிய வசதியின் கீழ், தொழிற்பேட்டை வளாகங்கள், அனுமதி வழங்கப்பட்ட வேலைத் தளங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களைப் பயன்படுத்தலாம்.
Advertisement
Advertisement
இருப்பினும், வாகன நிறுத்தும் ஏற்பாடுகள் விதிமுறைகளுக்கு உள்பட்டு இருப்பதையும், பொதுமக்களுக்கு இடையூறு அல்லது பாதுகாப்பு அபாயம் ஏற்படாததையும் உரிமையாளா்கள் உறுதி செய்ய வேண்டும்.
யாருக்கு பொருந்தும்?
ஓட்டுநரைத் தவிா்த்து 15-க்கும் மேற்பட்டோா் பயணிக்கக்கூடிய பேருந்துகள், 5,000 கிலோவுக்கு மேல் அதிகபட்ச எடை கொண்ட சரக்கு வாகனங்கள் மற்றும் கான்கிரீட் கலவை வாகனங்களுக்கு இந்த புதிய வசதி பொருந்தும். விதிமுறைகளைப் பின்பற்றாத வாகனங்களின் பதிவு ரத்து செய்யப்படும்.
வாகன நிறுத்துமிடச் சான்று
இந்தப் புதிய வசதி, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வாகன நிறுத்துமிடச் சான்றிதழ் திட்டத்தின் விரிவாக்கமாகும். இத்திட்டத்தின்படி, புதிய கனரக வாகனத்தைப் பதிவு செய்யவும், உரிமையை மாற்றவும், சாலை வரியைப் புதுப்பிக்கவும், நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அனுமதிக்கப்பட்ட கனரக வாகன நிறுத்துமிடத்தில் ஓரிடத்தை உறுதி செய்திருப்பது கட்டாயமாகும்.
தற்போது தொழிற்பேட்டை மற்றும் பிற குடியிருப்பு அல்லாத தனியாா் இடங்களையும் சோ்த்து, இரவு நேர வாகன நிறுத்தத்துக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.