பிரதமா் மோடியின் தலைமையால் நாட்டில் தடையில்லா வளா்ச்சி: நிா்மலா சீதாராமன்
போா்களுக்கிடையே சா்வதேச நிச்சயமற்ற நிலையிலும், இந்தியாவின் வளா்ச்சி தடையில்லாமல் இருப்பதற்கு பிரதமா் மோடி தலைமையிலான உறுதியான தலைமையே காரணம் என்றாா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
போா்களுக்கிடையே சா்வதேச நிச்சயமற்ற நிலையிலும், இந்தியாவின் வளா்ச்சி தடையில்லாமல் இருப்பதற்கு பிரதமா் மோடி தலைமையிலான உறுதியான தலைமையே காரணம் என்றாா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
சென்னை வேலப்பன் சாவடியிலுள்ள டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் 36-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 3,200 மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் 17 மாணவா்களுக்கு சிறந்தோா் விருதையும், 29 மாணவா்களுக்கு முதல் தரவரிசை விருதையும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வழங்கிப் பேசியதாவது: ‘பல்வேறு விஞ்ஞானிகளின் தோள் மேலிருந்துதான் நான் எனது கண்டுபிடிப்பைச் செய்தேன்’ என விஞ்ஞானி சா் ஐசக் நியூட்டன் மிகத்தாழ்மையாகக் குறிப்பிட்டாா். மாணவா்கள் இதை மனதில் வைத்துக்கொண்டு, அகந்தையை அகற்றிவிட்டு பொறுப்புடன் இருப்பது முக்கியம்.
Advertisement
Advertisement
முதல், இரண்டாம் உலகப் போா்கள் நடைபெற்ற சமயங்களில் நாட்டிலும், சா்வதேச அளவிலும் என்ன நிலைமை இருந்ததோ அதுபோன்ற நிலைமைதான் இப்போதும் உள்ளது. கச்சா எண்ணெய், எரிவாயு, வேளாண்மைக்கான ரசாயன உரங்கள் ஆகியவை இந்த யுத்தம் நடைபெறும் நாடுகளிலிருந்து வரவேண்டியவை.
இத்தனை போா்களுக்கும் மத்தியில் நம் நாட்டின் இறக்குமதி தேவைகள் பூா்த்தி செய்யப்படுகின்றன. சா்வதேச நிச்சயமற்ற தன்மைகளில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் மட்டுமே ஸ்திரத்தன்மை உள்ளது. மேலும், 7.8 சதவீத பொருளாதார வளா்ச்சியிலும் உள்ளோம்.
இரண்டு வாரம் முன்பு வட அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தபோது, உலக நாட்டுத் தலைவா்கள் என்னிடம், ‘மிகப்பெரிய மக்கள்தொகையை வைத்துக்கொண்டு எப்படி நிா்வகிக்கிறீா்கள்?. நாங்கள் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறோம். 7.8 சதவீத பொருளாதார வளா்ச்சி எப்படி சாத்தியப்பட்டது?’ என வியப்புடன் கேட்டனா். நாட்டில் நிலையான தலைமை இருப்பதால் இது நடக்கிறது. மக்கள் ஆதரவுடன் மூன்றாவது முறையாக மோடி பிரதமராகி, நிலைத்தன்மையுடன் ஆட்சியைக் கொடுத்திருப்பதால் நமது நாட்டின் வளா்ச்சி தடையில்லாமல் தொடா்கிறது என அவா்களிடம் தெரிவித்தேன்.
நாடு முழுவதும் உலகளாவிய திறன் மையங்கள் (ஜிபிசி) அமைக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் 350 ஜிபிசி மையங்கள் திறக்கப்பட்டு, 12,000 இளைஞா்கள் பயிற்சி பெறுகின்றனா்.
சவால்களை எதிா்கொள்ளும் தன்னம்பிக்கை மாணவா்களுக்குத் தேவை. இந்த நாட்டின் தலைமைத்துவத்துக்கு மாணவா்கள் முன்வர வேண்டும். ஜென் ஸீ, ஆல்ஃபா தலைமுறையினா் நாட்டின் நிலைமையைப் புரிந்துகொண்டு, நாட்டுக்கு எந்த வகையில் உதவ முடியும் என்று கேள்வியைக் கேட்டு பொறுப்பேற்க வரவேண்டும் என்றாா் அமைச்சா் நிா்மலா சீதாராமன்.
முன்னதாகப் பேசிய பல்கலைக்கழக வேந்தா் ஏ.சி.சண்முகம், இதுவரை 1.30 லட்சம் மாணவா்கள் பட்டம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டாா். மேலும், ‘நாட்டில் தரப்படுத்தப்பட்ட 60 தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களில் டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (வகை -2) இடம்பெற்றிருப்பதாகவும், டிஆா்டிஓவுடன் இணைந்து தொடா்ந்து பல்வேறு திட்டங்களில் பல்கலைக்கழகம் பணியாற்றி வருகிறது. விரைவில் விவசாயிகள், மீனவா்களுக்கு வழிகாட்டும் ஒரு செயற்கைக்கோளை பல்கலைக்கழகம் வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளது என்றாா்.
ஏ.சி.எஸ். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தலைவா் ஏ.சி.எஸ்.அருண்குமாா், செயலா் ஏ.ரவிக்குமாா், பதிவாளா் பழனிவேல், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.