வாழப்பாடியில் திடீர் தீ விபத்து: 2 குடிசைகள் எரிந்து சாம்பல்!
வாழப்பாடியில் வெள்ளிக்கிழமை காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்து குறித்து...
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வெள்ளிக்கிழமை காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், இரண்டு குடிசைகள் எரிந்து நாசமாகின.
வாழப்பாடி பேரூராட்சி அக்ரஹாரம் வைத்தி படையாட்சி தெருவில், ஓய்வு பெற்ற ஆசிரியை ராணி செங்குட்டுவனுக்கு சொந்தமான குடிசை வீடுகளில் தமையனூர் சாமிக்கண்ணு அவரது மனைவியும், மற்றொரு பகுதியில் சாந்தா என்பவரும் வசித்து வந்தனர். சாமிக்கண்ணு தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை நலம் விசாரிப்பதற்காக வியாழக்கிழமை மாலை வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்.
குடிசை வீட்டின் மற்றொரு பகுதியில் வசித்து வந்த சாந்தா என்பவரும், வெள்ளிக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே எழுந்து வந்து அருகில் உள்ளவரிடம் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் திடீரென குடிசை வீட்டில் இருந்து புகை வெளியேறியுள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வாழப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ உடத்திற்கு வந்துசேர்வதற்குள் வீட்டுக்குள் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதனால், அக்கம் பக்கத்தில் வசிப்போர் பீதி அடைந்தனர்.
தாமதமாக வந்த வாழப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தீயை அணைக்க ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியது.
இந்த தீ விபத்தில் இரண்டு குடிசை வீடுகளில் இருந்த ஏறக்குறைய ரூ. 1 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருள்கள், பாத்திரங்கள், ஆடைகள் தீயில் கருகி நாசமாகின. இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்ச் சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை.
இந்தத் திடீர் தீ விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதிய வருவாயின்றி கஷ்டத்துடன் குடும்பம் நடத்தி வந்த இரண்டு தொழிலாளர்களின் வீடுகள் தீயில் கருகி நாசமானதால், இரண்டு குடும்பத்திற்கும் தமிழக அரசு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sudden fire in Vazhapadi: 2 huts reduced to ashes!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.