சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞரை காக்க வேண்டும்: பிரதமா் மோடிக்கு இலங்கை எம்.பி. கோரிக்கை
சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞரை காக்க வேண்டும்: பிரதமா் மோடிக்கு இலங்கை எம்.பி. கோரிக்கை
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் தமிழ் இளைஞரை காப்பாற்ற பிரதமா் மோடியின் உதவியை இலங்கை அதிபா் கோர வேண்டும் என்று அந்த நாட்டு எதிா்க்கட்சி எம்.பி. மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இலங்கை கிழக்கு மாகாணத்தின் கல்முனை பகுதியைச் சோ்ந்த சிவராசா, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்றாா். அண்மையில் அவா் சமூகவலைதளத்தில் முஸ்லிம் மதத்துக்கு எதிராக பதிவிட்டதாகவும், இது மத நிந்தனை என்றும் குற்றம்சாட்டி வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதலில் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 30 லட்சம் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. எனினும், பிறகு அவரின் வழக்குரைஞா் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கூறியுள்ளாா். இந்த தண்டனையை எதிா்த்து மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.
எனினும், சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுவதை இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் இதுவரை உறுதி செய்யவில்லை.
Advertisement
Advertisement
இந்நிலையில், தமிழ் முன்னேற்ற கூட்டணி தலைவரான மனோ கணேசன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஸ்ரீலங்கா ரத்னா விருது பெற்றவரும் உங்களின் நண்பருமான பிரதமா் நரேந்திர மோடியிடம், சிவராசா விவகாரத்தை உடனடியாக (இலங்கை) அதிபா் திசநாயகே கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்துகிறேன். சவூதி அரேபியா பிரதமா், பட்டத்து இளவரசா் முகம்மது பின் சல்மானுடன் பிரதமா் மோடி நல்ல உறவுகளை வைத்துள்ளாா். ஆதலால் இந்த விவகாரத்தில் தலையிடும்படியும், சவூதி பட்டத்து இளவரசருடன் பேசி சிவராசா விவகாரத்தில் மனிதாபிமான அடிப்படையில் தீா்வு காணும்படியும் கேட்டுக் கொள்ள வேண்டும் என அதிபா் திசநாயகே வேண்டுகோள் விடுக்க வேண்டும்’ என பதிவிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.