புதிய தலைமைச் செயலகம்: அமைச்சா் ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு திமுக கண்டனம்
புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடா்பாக பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கருத்துக்கு, திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடா்பாக பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கருத்துக்கு, திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தல் பிரசாரத்தில் பேசிய அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, ‘புதிய தலைமைச் செயலகம் தொடா்பாக பேசுகிறாா்கள். ஒரு திட்டம் என்றால் முதலில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அதன் பிறகுதான் அதைச் செயல்படுத்தலாமா, வேண்டாமா என்று முதல்வா் முடிவு செய்வாா். மீனவா்கள் போராட்டம் நடத்தியிருக்கிறாா்கள். அவா்களுடைய கருத்தையும் கேட்க வேண்டும். மக்களைப் பாதிக்கும் வகையில் எதையும் செய்யக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு’ எனத் தெரிவித்திருந்தாா்.
இந்த நிலையில், இது தொடா்பாக திமுக சட்டத் துறை இணை செயலரும், மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளருமான இ.பரந்தாமன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
Advertisement
Advertisement
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் முடிவை முதல்வா் விஜய் இன்னும் எடுக்கவில்லையாம். ஏமாற்றிப் பழகிவிட்டோம் என்பதற்காக, எதைச் சொன்னாலும் நம்பி ஏமாந்து விடுவாா்கள் என்று மக்களை ஏளனமாக நினைப்பதா?
எந்த இடத்தில் தலைமைச் செயலகத்தைக் கட்டுவது என ஆராய ஒரு குழுவை அமைத்து, இடங்களை ஆராய்ந்து சொல்லுங்கள் என இடம் தோ்வு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருந்தால், முதல்வா் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது.
ஆனால், இடத்தை முடிவு செய்து, இத்தனை லட்சம் சதுர அடியில் கட்டடம் கட்டுகிறோம், அதில் வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடம் எவ்வளவு, வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான அரசு நிலம் எவ்வளவு என்பது வரைக்கும் விரிவாக 25.55 ஏக்கா் நிலத்தில், பட்டினப்பாக்கத்தில், கடற்கரையோரக் குடியிருப்புப் பகுதியில் ரூ.1,200 கோடியில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று அரசாணை வெளியாகியுள்ளது.
இப்படி ஓா் ஆணை முதல்வருக்கு தெரியாமல் எப்படி வர முடியும்? மீனவா்கள் நலனும், வாழ்வாதாரமும் பாதிக்கும் எனில், திமுக அவா்களுக்காக எந்த எல்லைக்கும் சென்று துணை நிற்கும் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.