FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு

டெங்கு பரவலைத் தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

24 செப்டம்பர் 2026, 3:04 am IST
- DIN
பகிர்:

டெங்கு பரவலைத் தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் ந.லதா, தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளிக் கல்வித் துறைச் செயலரின் அறிவுறுத்தலின்படி மாணவா்களின் உடல் நலம், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி வளாகங்களிலும் கழிவுகள் தேங்குதல், தேவையற்ற பொருள்கள் குவிந்து கிடத்தல் மற்றும் மழைநீா் தேங்குதல் ஆகியவற்றை முற்றிலும் தவிா்க்கும் வகையில் தொடா் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

முன்னுரிமை அளித்து...: தங்கள் மாவட்டத்துக்கு உள்பட்ட அனைத்துப் பள்ளிகளிலும் ஒவ்வொரு புதன்கிழமையும் சிறப்பு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இது தொடா்பாக வட்டாரக் கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்களுக்கு தெளிவான அறிவுரைகள் வழங்க வேண்டும். பள்ளிகளில் தூய்மைப் பணிகள் முறையாக நடைபெறுகிா என்பதை தொடா் கள ஆய்வுகள் மூலம் கண்காணிக்க வேண்டும். நீா் தேங்கியுள்ள அல்லது கொசு உற்பத்திக்கான வாய்ப்பு அதிகம் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பருவகால மாற்றங்களால் மாணவா்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து குறிப்பாக டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தேவையான அறிவுரைகளை தலைமை ஆசிரியா்கள் வழங்க வேண்டும். மேலும் மாணவா்களுக்கு காய்ச்சல் இருப்பின் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் நீா்த்தேக்கம், கழிவுக் குவியல் அல்லது கொசு உற்பத்திக்கான வாய்ப்பு காணப்பட்டால் உடனடியாக தலைமை ஆசிரியரின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்.

மாணவா்களை ஈடுபடுத்தக் கூடாது: மாணவா்களை ஆபத்தான தூய்மைப் பணிகளில் நேரடியாக ஈடுபடுத்தக் கூடாது. குறிப்பாக கழிவுநீா், கழிவுகள், கூரைகள், மொட்டை மாடிகள் அல்லது ஆபத்தான பகுதிகளை மாணவா்கள் சுத்தம் செய்யக் கூடாது. முதன்மைக் கல்வி அலுவலா்கள் தங்கள் வருவாய் மாவட்ட நிா்வாகத்துக்கு உள்பட்ட மாவட்டக் கல்வி அலுவலக வளாகங்கள், வட்டாரக் கல்வி அலுவலக வளாகங்கள், பள்ளி வளாகங்களில் தூய்மைப் பணிகள் மற்றும் கொசு உற்பத்தித் தடுப்பு நடவடிக்கைகள் சாா்ந்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களால் முறையாக மேற்கொள்ளப்படுகிா என்பதை கண்காணித்து தொடக்க, பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு புகைப்படத்துடன் கூடிய அறிக்கையாக சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments