எனக்கு ஏன் பெட்டி கொடுக்கப் போகிறார்கள்? தவெகவில் இணைந்தது ஏன்? மரகதம் குமரவேல் பேச்சு
எனக்கு ஏன் பெட்டி கொடுக்கப் போகிறார்கள்? தவெகவில் இணைந்தது ஏன்? என்று மரகதம் குமரவேல் கூறியது பற்றி..
ஊழலற்ற ஆட்சி என்ற கொள்கையுடன் ஆட்சிக்கு வந்திருக்கும் தவெக, எனக்கு ஏன் பெட்டி கொடுக்கப் போகிறார்கள், தீய சக்தி திமுகவுடன் இணைவதற்கு அதிமுக முடிவு செய்த போதுதான், கட்சியிலிருந்து வெளியேறி ராஜிநாமா செய்தேன் என்று தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் கூறியுள்ளார்.
மதுராந்தகம் இடைத்தோ்தலில் தவெக வேட்பாளா் மரகதம் குமரவேலை ஆதரித்து, தொழுப்பேடு, ஆத்தூா் அருகேயுள்ள திறந்தவெளி மைதானத்தில் முதல்வா் ச.ஜோசப் விஜய் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், தீய சக்தி திமுகவும், தீய சக்திக்கு உடந்தையாக இருக்கும் அதிமுகவும் என் மீது வைக்கும் ஒரே குற்றச்சாட்டு நான் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டேன் என்பதுதான்.
Advertisement
Advertisement
தீய சக்தியுடன் இணைவதாக அதிமுக முடிவு செய்த போதுதான் அதிமுகவிலிருந்து வெளியே வந்தேன். கட்சியிலிருந்து வெளியே வந்து மன உளைச்சலில் இருந்தேன்.
ஆனால், இப்போது நான் இந்த வேனில் ஏறும்போது, நான் இருக்கிறேன் அம்மா என்று கைகொடுத்து மேலே ஏற்றிவிட்டார் முதல்வர் விஜய். தமிழ்நாட்டில் யாராக இருந்தாலும் கைகொடுத்த அண்ணனுக்கு மிகுந்த நன்றி.
ஏன் சொல்கிறேன் என்றால், என்னுடைய தந்தை ராமாபுரம் தோட்டத்தில் தோட்ட வேலை செய்தவர். ஆனால் எம்ஜிஆர் வீட்டில் ஒருவர் போல வாழ்ந்தார். புரட்சித் தலைவர் உப்பை நான் சாப்பிட்டிருக்கிறேன். அவரது ரத்தம்தான் என் உடம்பில் ஓடுகிறது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர்-ஆல்தான் எனக்கு அரசியலில் அங்கீகாரம் கிடைத்தது. புரட்சித் தலைவி ஜெயலலிதாதான் எனக்கு அடையாளம் காட்டிய தாய். ஜெயலலிதா எந்தக் கட்சிக்காக அதிமுகவைக் கொண்டு வந்தார்களோ, அந்தக் கட்சியுடன் இணைய நினைத்தார்கள். அதனால்தான் வெளியே வந்தேன்.
என்னை நான் பார்த்துக் கொள்வேன், ஆனால், இந்த மதுராந்தகம் தொகுதி மக்களுக்காகத்தான் தவெகவில் இணைந்தேன்.
குதிரை பேரம் என்று சொல்கிறார்கள், தவெகவின் கொள்கையே ஊழல் அற்ற ஆட்சிதான். அப்படியிருக்கும் கட்சியின் தலைவர் விஜய், எனக்கு ஏன் பெட்டி கொடுக்கப் போகிறார்கள். இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாமல் திமுக - அதிமுக என் மீது குற்றச்சாட்டுகிறார்கள்.
வாக்குக்கு பணம் கொடுக்காமல் மாபெரும் வெற்றி பெற்று சரித்திரம் படைத்தவர், எனக்கு ஏன் பணம் கொடுக்கப் போகிறார்கள். திமுகவுடன் இணைவது என்ற முடிவை என் மனம் பொறுக்கவில்லை என்று மரகதம் குமரவேல் கூறினார்.
மேலும், என்னைப் பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும் என் மதுராந்தகம் தொகுதி மக்களை பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செய்து கொடுங்கள் என்று முதல்வர் விஜய்யிடம் மரகதம் குமரவேல் கோரிக்கை வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்று, அதனை நான் காணிக்கையாக செலுத்துவேன் என்று முதல்வர் விஜய்க்கு உறுதியளித்தார் மரகதம் குமரவேல்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.