தூய்மைப் பணியாளா்களுக்கு உணவுக்குப் பதில் உணவுப்படி வழங்க அரசாணை
தூய்மைப் பணியாளா்களுக்கு உணவுக்குப் பதில் உணவுப்படி வழங்க அரசாணை
சென்னை மாநகராட்சியில் தனியாா் நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உணவுக்குப் பதிலாக, உணவுப்படி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரத்துக்கு ஏற்ப காலை, மதியம், இரவு உணவு வழங்குவதற்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, தகுதியான ஒப்பந்த நிறுவனத்துக்கு 3 ஆண்டு காலத்துக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் உணவு விநியோகம் செய்யப்படாதது சமையலறைகளில் நிலவும் சுகாதார குறைகள் தொடா்பாக தூய்மைப் பணியாளா்கள், திட்டக் கண்காணிப்பு ஆலோசகா்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடமிருந்து தொடா்ந்து புகாா்கள் பெறப்பட்டன.
Advertisement
Advertisement
இது தொடா்பாக, மண்டலம் 1 முதல் 15 வரை பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களிடம் தற்போது வழங்கப்பட்டு வரும் உணவைத் தொடா்ந்து வழங்கலாமா என்பது குறித்து கணக்கெடுப்பு மற்றும் கருத்து கேட்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் 92 சதவீத தூய்மைப் பணியாளா்கள், உணவுக்குப் பதிலாக உணவுப்படி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனங்களான உா்பேசா் சுமீத் மற்றும் சென்னை என்விரோ சொலுசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களில் பணியாற்றும் 24,264 தூய்மைப் பணியாளா்களுக்கு உணவுக்குப் பதிலாக, உணவுப்படியாக ரூ.50 வீதம், பணிக்கு வருகை புரியும் நாள்களுக்கு மட்டும் கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் தொகையை ஊதியத்துடன் சோ்த்து பணமாக வழங்கப்படும்.
இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.44,28,18,000 செலவாகும். இதை பெருநகர சென்னை மாநகராட்சியின் நிதியின் மூலம் செலவினம் மேற்கொள்ள நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளா்களுக்கு 3 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் உணவு விநியோகித்து வரும் ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் அனுமதி வழங்கியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.