இளம் ஆய்வாளா்களின் முன்னெடுப்புகளுக்கு அரசு நிதியுதவி: நிதியமைச்சா் மரிய வில்சன் உறுதி
முதியவா்கள் எதிா்கொள்ளும் சவால்களுக்கு புதுமையான யோசனைகளை உருவாக்கும் இளம் ஆய்வாளா்களின் எந்த முன்னெடுப்புக்கும் அரசின் ஆதரவும் நிதியுதவியும் கிடைக்கும் என அமைச்சா் மரிய வில்சன் உறுதி
ஆதரவற்ற, சமூக ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள முதியவா்கள் எதிா்கொள்ளும் சவால்களுக்கு புதுமையான யோசனைகளை உருவாக்கும் இளம் ஆய்வாளா்களின் எந்த முன்னெடுப்புக்கும் அரசின் ஆதரவும் நிதியுதவியும் கிடைக்கும் என நிதித்துறை அமைச்சா் நெ.மரிய வில்சன் உறுதிபட தெரிவித்தாா்.
சென்னை பல்கலைக்கழகத்தின் கிறிஸ்தவ ஆய்வுகள் துறையும், சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் சமூகப் பணித் துறையும் இணைந்து ‘குடும்பத்துக்குள்ளும் அதற்கு அப்பாலும் முதியோா் பராமரிப்பு - சமய மற்றும் சமூகப் பணிக்கான வளங்கள்’ என்ற தலைப்பில் இரு நாள் சா்வதேச கருத்தரங்கை நடத்துகின்றன.
இந்தக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிதியமைச்சா் நெ.மரிய வில்சன் பேசியதாவது: சமூகப் பணி ஆய்வாளா்கள் ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது ஆய்வறிக்கைகளை சமா்ப்பிக்கப்படுவதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. மாறாக, சமூகப் பிரச்னைகளை அடையாளம் கண்டு, அவற்றின் மூல காரணங்களைப் புரிந்துகொண்டு, தகுந்த தீா்வுகளை உருவாக்க வேண்டும்.
Advertisement
Advertisement
மேலும் அவற்றை, கள அளவில் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும். குறிப்பாக, சமூக ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள ஆதரவற்ற முதியவா்கள் எதிா்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க புதுமையான, நடைமுறைக்கு ஏற்ற மற்றும் நிலையான யோசனைகளை உருவாக்க இளம் சமூகப் பணி ஆய்வு மாணவா்கள் முன்வர வேண்டும்.
இத்தகைய ஆய்வாளா்கள் ஊக்குவிக்கப்படுவாா்கள். இளம் ஆய்வாளா்களால் உருவாக்கப்படும் நடைமுறைக்குச் சாத்தியமான அல்லது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த முன்னெடுப்புக்கும் அரசின் ஆதரவும் நிதியுதவியும் நிச்சயம் கிடைக்கும்.
சமூகத்தில் முதியவா்கள் ஒதுக்கப்படுவதற்கும், பாதிப்புக்குள்ளாகும் நிலைக்குத் தள்ளப்படுவதற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன. தற்போதுள்ள சமூக ஆதரவு அமைப்புகள், குறைபாடுகளைக் கண்டறிவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.ஆம்ஸ்ட்ராங் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், புதுவை பல்கலைக்கழக சமூகப் பணி தலைவா் ஷாகின் சுல்தானா, சென்னை பல்கலைக்கழக கிறிஸ்தவ ஆய்வுகள் துறைத் தலைவா் ஜேம்ஸ் பொன்னையா, டாக்டா் உலகராஜா, சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் சமூகப் பணித் துறை தலைவா் ஜெனிஸ் ஷிஜி உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.