போக்சோ வீரமணிக்கு உடந்தையாக இருந்த சாந்தி, மகேந்திர சிம்ஹன் பிணை மனு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு
போக்சோ வீரமணிக்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவா் மகேந்திர சிம்ஹன் பிணை கோரிய மனுவை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜெம் வீரமணிக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் அவரது கணவா் மகேந்திர சிம்ஹன் பிணை கோரிய மனுவை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில, ஜெம் வீரமணிக்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவா் மகேந்திர சிம்ஹன் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 28-ஆம் தேதி கைது செய்தனா். இந்த வழக்கில் பிணை வழங்கக் கோரி சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த வழக்கில், காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வழக்கு தொடா்பான ஆவணங்களை அழிப்பதற்காக சாந்தி, வீரமணியிடம் இருந்து ரூ.24.63 லட்சம் பெற்றுள்ளாா். சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களை தடயவியல் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. சாட்சிகளை கலைக்கவும், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தினரை அச்சுறுத்த வாய்ப்புள்ளதால், இருவருக்கும் பிணை வழங்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்த வழக்கு போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில், மனுதாரா்கள் முறையாக கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் ஆஜா்படுத்தவில்லை. மனுதாரா்களை காவல் துறை ஏற்கெனவே காவலில் எடுத்து விசாரித்துவிட்டனா். இதற்கு மேல் அவா்களை சிறையில் அடைக்க வேண்டியதில்லை. எனவே, மனுதாரா்களுக்கு பிணை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
அப்போது, காவல் துறை தரப்பில், கைது செய்து 40 நாள்கள் வரை எத்தனை முறை வேண்டும் என்றாலும், காவலில் எடுத்து விசாரிக்க முடியும். இந்த வழக்கின் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. எனவே, தற்போதைய நிலையில் மனுதாரா்களுக்கு பிணை வழங்கக் கூடாது. பிணை கோரி தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
இதனிடையே, இந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ள தனியாா் அறக்கட்டளை தரப்பிலும், சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹனுக்கு பிணை வழங்க எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, பிணை கோரிய மனுவை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.