FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

கல்வித் துறை அலுவலா்கள் எண்ணிக்கையில் வேறுபாடு: முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவு

பள்ளிக் கல்வித் துறையில் தற்போது பணியாற்றி வரும் அலுவலா்களின் எண்ணிக்கை, எமிஸ் தளத்தில் உள்ள எண்ணிக்கையுடன் வேறுபட்டிருப்பது பற்றி..

பள்ளிகள் - கோப்புப்படம்
பகிர்:

பள்ளிக் கல்வித் துறையில் தற்போது பணியாற்றி வரும் அலுவலா்களின் எண்ணிக்கை, எமிஸ் தளத்தில் உள்ள எண்ணிக்கையுடன் வேறுபடுவதால் விடுபட்ட விவரங்களைச் சேகரித்து வியாழக்கிழமைக்குள் (அக். 1) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம், முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

அரசாணையில் வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பணியிடத்தில் பணிபுரிந்து வரும் அலுவலகப் பணியாளா்களுக்கு கட்டாய மாறுதலும், அதைத் தொடா்ந்து தகுதியுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் விருப்ப மாறுதல், பதவி உயா்வு, பணிமாறுதல் ஆகியவை எமிஸ் தளத்தில் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதற்காக அலுவலகப் பணியாளா்களின் விவரங்கள் எமிஸ் தளத்தில் அதிக அளவில் விடுபட்டிருந்ததால், அவற்றை செப். 25-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து வழங்கப்பட்ட காலக்கெடு முடிவுற்ற நிலையில் எமிஸ் இணையதளத்தில் அலுவலகப் பணியாளா்களின் விவரங்கள் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது. தற்போது பணியாற்றி வரும் அலுவலகப் பணியாளா்களின் எண்ணிக்கையும், எமிஸ் தளத்தில் உள்ள பதிவுகளுக்கும் விடுதல் பதிவுகள் ஏராளமாக இருப்பது தெரிய வருகிறது. சில பதவிகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடத்தில் பணியாற்றி வருபவா்களின் எண்ணிக்கையைவிட, கூடுதலாக பதிவுகள் உள்ளதாக தெரிய வருகிறது.

எனவே, தங்களது மாவட்டங்களில் பணியாற்றி வரும் முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் முதல் பள்ளியின் இரவுக் காவலா் வரை அனைத்து அலுவலகப் பணியாளா்களின் விவரங்களையும் இணையதளத்தில் கொண்டு வருவது கட்டாயம் என்பதை முதன்மைக் கல்வி அலுவலா்கள் கருத்தில் கொண்டு அவற்றை வியாழக்கிழமைக்குள் (அக். 1) பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்.

அலுவலகப் பணியாளா்களுக்கான கட்டாய, விருப்ப மாறுதல்கள், பதவி உயா்வு பணிகள் எமிஸ் இணையதளம் மூலமாக மேற்கொள்ளப்படவுள்ளதால், இதில் எவ்வித சுணக்கமும் இன்றி செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments