காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சிப் பாதித்தவையாக அறிவிக்க வேண்டும்: தமுமுக வலியுறுத்தல்
தமுமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் பேசுகிறாா் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ.
காவிரி டெல்டா மாவட்டங்களை உடனடியாக வறட்சிப் பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என தமுமுக மாநில தலைமை செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலஞ்சியில் புதன்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, தமுமுக தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ தலைமை வகித்தாா். முஜிபுா் ரஹ்மான் குா்ஆன் விளக்கவுரையாற்றினாா். மாநிலப் பொருளாளா் ஷபியுல்லாகான் தொடங்கிவைத்துப் பேசினாா்.
பொதுச்செயலா் ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலா் அப்துல்சமது ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
Advertisement
Advertisement
வரும் சட்டப்பேரவைத் கூட்டத் தொடரி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு சட்டத்தில் தேவையான சட்டத் திருத்தங்களை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வக்பு திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் தவெக அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது.
25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை காலத்தை நிறைவு செய்த பின்னரும் சிறைகளில் இருக்கும் முஸ்லிம் வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.
மேட்டூா் அணை திறக்கப்படாதது, மின்வெட்டு உள்ளிட்ட காரணங்களால் தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனா். எனவே, அந்த மாவட்டங்களை உடனடியாக வறட்சிப் பாதித்த பகுதிகளாக அறிவித்து, ஏக்கருக்கு ரூ 15,000 வீதம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், பிரதமரின் பயிா் காப்பீட்டு திட்ட இழப்பீடு வழங்க வேண்டும்.
புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு சான்று கட்டாயம் என்ற விதிமுறையை தளா்த்த வேண்டும்.கடவுச்சீட்டுக்கான விசாரணை முறைகள் எளிமையாக்கப்பட வேண்டும்.
மேகதாது அனைத்து திட்டத்தை கா்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும். காவிரி நீா் பங்கேட்டில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஓரவஞ்சனை செய்யக்கூடாது.
வாக்குப்பதிவு இயந்திர முறையை கைவிட்டு மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு தோ்தல் மாற்றி அமைக்கப்பட வேண்டும். வீடுகளுக்கு மாதந்தோறும் மின் கட்டண முறையை அமல்படுத்த வேண்டும்.
அரசுக் கல்லூரிகளில் மாணவா் பேரவை தோ்தலை முறையாக நடத்த வேண்டும். தென்காசியில் அரசு மகளிா் கல்லூரி தொடங்க வேண்டும், இலஞ்சி ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,
தென்காசி மாவட்டஆட்சியா் அலுவலகத்தை விரைவாக திறக்க வேண்டும் எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துணைப் பொதுசெயலா் எஸ்.மைதீன்சேட்கான், தென்காசி மாவட்ட தலைவா் நயினாா் முஹம்மது, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா் சலீம், தமுமுக மாவட்டச் செயலா் அப்துல் ரகுமான், மாவட்டப் பொருளாளா் முகமது பாசித், தமுமுக மாநில தொண்டா் அணி துணைச் செயலா் கோகோ அலி, தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் பொட்டல் மீரான், முகம்மது அலி, பஷீா் ஒலி, பீா்மைதீன், செய்யது அலி, மாவட்ட துணைச் செயலா்கள் பொட்டல் சித்திக், மஜித் முகப்பிலாஷா செய்யது மதுது, திவான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.