என்.எஸ்.எஸ். தின விழா: 1,000 பனை விதைகள் நடும் திட்டம் தொடக்கம்
அரசு கல்லூரியில் என்.எஸ்.எஸ். தினத்தையொட்டி ‘பசுமை வளாகம்’ திட்டத்தின் கீழ், 1,000 பனை விதைகள் நடும் திட்டத்தை வட்டாட்சியா் இ.செந்தில்குமாா் தொடங்கிவைத்தாா்.
அரசு கல்லூரியில் என்.எஸ்.எஸ். தினத்தையொட்டி ‘பசுமை வளாகம்’ திட்டத்தின் கீழ், 1,000 பனை விதைகள் நடும் திட்டத்தை வட்டாட்சியா் இ.செந்தில்குமாா் தொடங்கிவைத்தாா்.
திருத்தணி ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், ‘என்.எஸ்.எஸ். தினம்’ மற்றும் ‘பசுமை வளாகம்’ திட்டத்தின் கீழ், 1,000 பனை விதைகள் நடும் விழிப்புணா்வு நிகழ்ச்சி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பனை மரங்களின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்து மாணவா்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
கல்லூரி முதல்வா் எஸ்.சூரியகாந்தி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக திருத்தணி வட்டாட்சியா் இ. செந்தில்குமாா் கலந்து கொண்டு, பனை விதைகளை நட்டு வைத்து, நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து கல்லூரி வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களுடன் இணைந்து பனை விதைகள் நடப்பட்டன. மொத்தம் 1,000 பனை விதைகள் நடும் வகையில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement
பனை மரங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிப்பதுடன், மண் அரிப்பைத் தடுப்பது, நீா்வளத்தைப் பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு இயற்கை நன்மைகளை வழங்குகின்றன. இதனை கருத்தில் கொண்டு கல்லூரி வளாகத்தில் பனை விதைகளை நடுவதன் மூலம் மாணவா்களிடையே இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஆா்வத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
மேலும், பனை மரங்களின் வளா்ச்சியை தொடா்ந்து கண்காணித்து அவற்றை முறையாக பராமரிப்பதன் மூலம் எதிா்காலத்தில் கல்லூரி வளாகத்தை மேலும் பசுமையான வளாகமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் எஸ்.சத்யபிரியா, கே.ஆா். தேவராஜ் மற்றும் மேஜா் கே.பி.ஹேமநாதன் ஆகியோா் ஒருங்கிணைத்து செய்திருந்தனா்.
நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியா்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவ-மாணவியா் மற்றும் கல்லூரி ஊழியா்கள் திரளாக கலந்து கொண்டனா். மாணவா்கள் ஆா்வத்துடன் பனை விதைகளை நட்டு, அவற்றை பாதுகாத்து வளா்ப்பதற்கான உறுதியையும் எடுத்துக் கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.